July 22, 2020

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்!



அதிகாலையையும்
அதன் வாசத்தையும்
அது தரும் புத்துணர்வையும்
அமைதியையும்
மென் பனிக் காற்றையும்
மலைக் குழந்தைகளை அணைத்துக் கிடக்கும் மேக அன்னையையும்
பனியில் நனைந்த பச்சை மரஞ்செடிகளையும்
மயில் மைனா புறா காக்கை கிளிகளையும்
நான் தினமும் ரசிப்பதால்தான்
நீ பொறாமை கொண்டு
இதெல்லாம் எனக்குக் கிட்டாதவாறு
செய்து விடுகிறாயோ?
ஏ மழையே!
என் ஏகாந்த வேளையைப் பறிக்காதே!
சிறிது நேரம் கழித்துதான் பெய்யேன்!
- என்று இரண்டு மூன்று நாள்களாகப் பெய்யும் அதிகாலை மழையிடம் நான் கேட்டேன்.

நானும்தான் பார்க்கிறேன்
நீ முன்பு போல என்னை ரசிப்பதில்லை
மகள் பள்ளிக்குச் செல்லும் / வரும் போது, பெய்யாதே என்றாய்
துவைத்த துணி காய்வதில்லை, பெய்யாதே என்றாய்
களிமண் ரோட்டில் நடக்க பயமாய் இருக்கிறது, பெய்யாதே என்றாய்
இப்போது என்னடா வென்றால் அதிகாலையிலும் பெய்யாதே என்கிறாய்.
- என்று சோகமாகப் பதில் சொன்னது மழை.

பெற்றோரிடம் ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக்கொண்டு வந்த முருகனை, பல நிகழ்வுகளைச் சொல்லி சமாதானம் செய்த பார்வதியைப் போல, நானும் பல நினைவுகளை மழையிடம் சொல்ல ஆரம்பித்தேன். கவிதை (மாதிரி?) நடையிலிருந்து கட்டுரை நடைக்கு உரையாடல் மாறுகிறது.

எனக்கு நினைவு தெரிந்தது முதல், மழையை ரசித்துதான் இருக்கிறேன். எனக்கு நான்கைந்து வயதாக இருந்தபோது சென்னையில் பலத்த புயல் மழை. நாங்கள் வசித்தத் தெருவில் மழை நீர் புரண்டு ஓடுகிறது. நான் அழுது அடம்பிடித்ததால், மழை சற்றே ஓய்ந்த நேரத்தில், என் அப்பா ஒருசில நொடிகள் என்னை ஓடும் நீரில் நிற்க வைத்தார். இப்போதும் சில்லென்று இருக்கிறது அந்த முதல் மழையின் நினைவு.

நாங்கள் அன்று குடியிருந்த திருவல்லிக்கேணி வீட்டில், மழை வந்தால் வராண்டா முழுவதும் தண்ணீர் நிரம்பிவிடும். மழை நின்று சில மணி நேரங்களில் தானாகவே வற்றிவிடும். ஆனால், பலத்த மழை பெய்தால், வராண்டா நிரம்பி, வீட்டுக்குள் நீர் புகுந்துவிட்டால் என்ன ஆவதென்று பயந்து, வீட்டு பெரியவர்கள் பக்கெட்டில் நீரைப் பிடித்து தெருவில் இறைப்பார்கள். ஏழெட்டு வயதான நானும், ஒரு சிறிய குவளையில் நீர் வடிய உதவுவேன். அந்த வயசில் அவ்வளவு மகிழ்ச்சியான வேலை அது.

நான் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் நேரம். அதே மழை. மழையில் நனையும், என் அதே ஆவல். ஆனால், பள்ளிக்கு செல்கையில் புத்தகப் பை நனையாமல் இருக்கணுமே என்பதால், வடாம் காயப்போடும் பிளாஸ்டிக் கவர்தான், என்னுடைய அப்போதைய ரெயின்கோட் (பின்பக்கம் & தலை முற்றும் மூடியிருக்கும். முன்பக்கம் பின்'னினால் மூட வேண்டும்). "ஏன் நனையாம ரெயின்கோட் போட்டுட்டு போற"ன்னு கோவமா தலைல மழை `கொட்டும்.'

என் கல்லூரிக்காலம். அதே மழை. மழையில் நனையும் என் அதே ஆவல். ஒருவழியாக இந்த முறை என் ஆசை நிறைவேறியது. கல்லூரி என்றாலே, அதும் பெண்களின் பிரத்யேகக் கல்லூரி என்றால், இவற்றையெல்லாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். எனவே, கல்லூரி கேன்டீனில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே, மழையில் நனைந்ததெல்லாம் மறக்கவே முடியாத ஆனந்தம்.

வாழ்க்கை ஒரு சுழற்சக்கரம் போல சுழல, என் மகளுடன் இப்போது நான் சேர்ந்துகொண்டேன் மழையை ரசிக்க. அவள் என்ன செய்துகொண்டிருந்தாலும், அதை அப்படியே போட்டுவிட்டு, ``அம்மா, சீக்கிரம் வா. பால்கனிக்குப் போலாம்"ன்னு என்னையும் அழைத்துக்கொண்டு போய்டுவா. சாரலில் நனைந்து, கையை வெளிய நீட்டி குதூகலிப்பாள். ஓரிரு முறை மெல்லிய மழையில் நனைந்தும் இருக்கிறாள்.

இப்படி நான் எல்லாவற்றையும் நினைவுபடுத்தி, மழையை எனக்கு எவ்வளவு பிடிக்கும், அதுதான் என்னுடைய எனர்ஜி பூஸ்டர் என்பதை மழைக்கு புரிய வைத்தேன். மேலும், கொரோனா முடக்கம் காரணமாக, வெளியே செல்ல முடியாததால்தான், அதிகாலை மொட்டைமாடி நடைப்பயிற்சி. நீ வந்து அதற்கும் தடை போட்டதால்தான், உரிமையாக உன்னைத் தட்டி கேட்டேன் என்று மழைக்குப் புரிய வைத்தேன்.

நான் சொன்னவற்றையெல்லாம் கேட்டு, கோபம் நீங்கி, உற்சாகமாகி, ``சரி, உன்னைத் தொந்தரவு செய்யாமல் இனி வரப் பார்க்கிறேன்" என்றது மழை. நாளை முதல் பார்ப்போம், மழை தன் வாக்கை காப்பாற்றுகிறதா என்று.

This was published by Vitakan - https://www.vikatan.com/oddities/miscellaneous/conversation-between-woman-and-rain-readers-imagination

January 23, 2020

My Articles on Online Vikatan


கடந்த ஆறு மாதங்களில் எனது மொத்தம் 12 எழுத்து படைப்புகளை விகடன் தளம் வெளியிட்டது. விகடனுக்கு நன்றி. சிறந்த ஹிட் படைப்புகளை தரும் டாப் 6 இல் என் பெயரும் வந்தது மிக்க மகிழ்ச்சி.


விகடன் தளத்தில் வெளிவந்த என் கட்டுரைகள்:

12. "காண்பதெல்லாம் காதலா டி?!" - என் முதல் சிறுகதை. 
விகடனில் "நீ முன்ன மாதிரி இல்லையேடா..!’’ - அம்மாவின் வார்த்தையால் அதிர்ந்த மகள்" என்ற தலைப்பில். 15 Apr 21 

11. மழையுடன் ஒரு ஜில் உரையாடல் - 21 July 20

10. நான் வளர்கிறேனே அம்மா..! - கவிதை - 6 July 20

9. லாக் டவுனுக்கு பிந்தைய நோய்கள்..! - 3 July 20

8. காற்றே என் பால்கனி! - 21 Jun 20

7. பெண்களைக் கொண்டாட வேண்டிய தருணம் இது! - 12 Mar 20

6. `இல்லத்தரசிகளுக்கு உபயோகமான 10 ஹேக்ஸ்!' - வாசகி பகிர்வு - 3 Feb 20

5. என் சுட்டி மகளும் ஹாரிபாட்டர் புத்தகங்களும்! - தித்திக்கும் வாசிப்பனுபவம் - 21 Jan 20

4. திருவல்லிக்கேணி நாள்கள்! - ஒரு குட்டி பிளாஷ்பேக் - 3 Jan 20

3. நம்புங்க நானும் உடற்பயிற்சி செய்கிறேன்! - 19 Dec 19

2. "உன் சேட்டைக்கு இல்லையாம்மா ஒரு எண்டு..!" - அம்மா எழுதும் மகள் புராணம் - 7 Dec 19

1. என் குட்டி(க்கு) விருதுகள்! - 4 Dec 19 
https://sudhazscribbles.blogspot.com/2012/12/blog-post.html



November 12, 2019

காபி


எப்போது light மாறி strong ஆனதோ
எப்போது வெதுவெதுப்பு மாறி சூடானதோ
அப்போதே நான் காபி அடிக்ட் ஆக துவங்கியிருந்தேன்.

எப்போது அஸ்கா சர்க்கரை தவிர்த்து நாட்டுசர்க்கரைக்கு பழகினேனோ அப்போது சுவைத்த காபியின் துவர்ப்பு சுவை, என்னை காபிக்கு அடிக்ட் ஆக்கியது.

காலை எழுந்தவுடன் காபி.
தலைவலிக்கு காபி.
புத்துணர்வுக்கு காபி.
சில்லென்ற மழைக்கு காபி.
ஓட்டலில் டிபனுக்கு அடுத்து கட்டாயம் காபி. 

வார நாட்களின் பரபரப்பு அடங்கிய அமைதியான காலை பொழுதில்,
பரபரப்பு தந்த அசதியை போக்கவும், புத்துணர்வு பெறவும், அதிகாலை டோஸ் போலல்லாமல் மெதுவாக ரசித்து ருசித்து குடிக்கும் இரண்டாம் கப் காபிதான் என்னுடைய most favourite.

அரிதான ஆனால் அனைத்திலும் அருமையானதுன்னா மதிய தூக்கத்திற்கு பிறகு குடிக்கும் பெட் காபிதான்.

க்ரீன் லேபிள்
ப்ரூ
நரசுஸ்
காபிடே
கண்ணன்
எதுவுமே சிறிது காலத்திற்கு பின் சுவை தராமல் போக, தற்போது கோத்தாஸ் நிறைவு தருகிறது. 

காபி பில்ட்டர் > காபி மேக்கர் any time.
பெர்க்கொலேட்டர் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. வாங்கி பார்க்கணும்.

கும்பகோணம் டிகிரி காபி
வேலன் காபி
சரவணபவன்
ஆனந்தாஸ்
அன்னபூர்ணா
Cafe Coffee Day (my least favorite coffee🙄).
மற்றும் பல. இப்படி எல்லா காபியும் டேஸ்ட் பண்ணியாச்சு.😋😇

காபி நல்லதா கெட்டதான்னெல்லாம் ஆராய தோணாது எனக்கு. I enjoy drinking it as it touches my soul more than my tongue.

ஒரே குறை. பானங்களில் நான் காபின்னும் கண்ணன் சொல்லியிருக்கலாம். 😁