January 10, 2016

பசுமை நிறைந்த நினைவுகளே!



இது என்னுடைய பழைய நினைவுகளின் (flash back) பதிவு. சென்னை நகரத்திலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், அப்போது கணினிக் காலமல்லாததால், ஒரு சிறு நகரம் அல்லது கிராமத்து அனுபவத்துக்கு ஒத்திருந்தது என்னுடைய இளமை காலம்.   

பார்த்தசாரதி கோவில் திருவிழாக்கள்:
பார்த்தசாரதி கோவிலில் பத்து நாள் உற்சவம்  வருடத்திற்கு இரண்டு நடக்கும். தேர் வரும். உஞ்சவிர்த்தி பஜனை பாடி வீதி உலா வருவார்கள். புரட்டாசியில் பெரிய நாமம் இட்டு ரோட்டிலேயே உருண்டு பிரார்த்தனை செய்வார்கள் - அவர்களை ஆச்சர்யமாக பார்த்த நாட்கள்… 

தெப்போத்சவ நாட்களில் சாயங்காலமே குடும்பத்தோடு போய் குளப் படிக்கெட்டுகளில் இடம் பிடித்து அமர்ந்தது...  வைகுண்ட ஏகாதசியில் கூட்டத்தோடு அலைமோதி சொர்க்கவாசல் நுழைந்தது... மார்கழியில் விடி காலையிலேயே எழுந்து அம்மாவோடு கோயிலுக்கு போனது...  எனக்கு பிடித்த பார்த்தசாரதி கோயில் பிரசாதம் புளியோதரை, அதிரசம் ரெண்டும் சாப்பிட்டது… என இவ்வளவும் பசுமையா நினைவுல இருக்கு.

கோயில் விசேஷங்களில் தெருக்களில் தோன்றும் தற்காலிக நடைமேடை (platform) கடைகள் ஒரு விசேஷம். அங்கு எனக்கு பிடித்ததை வாங்க அம்மா, பாட்டி என பலர் தரும்  ரூபாயை வைத்து  எதையாவது வாங்குறது பயங்கர குஷி.

அம்மன் கோவில்:
எங்கள் வீட்டு எதிரிலேயே சிறிய அம்மன் கோவில் இருந்தது. ஆடி மாதத்தில் காலையிலும் மாலையிலும் மைக் செட்டில் அலறும் பாட்டை, படிப்பை தொந்தரவு செய்யுதேன்னு புலம்பியது ஒரு புறம். ஆனால் அனைத்து பாடலும் பிடித்து மனப்பாடம் ஆனது மறுபுறம். 

கற்பூர ஆரத்தி செய்யும்போது தவறாமல் யாராவது ஒருவருக்கு 'சாமி' வரும். அப்போது வேறு யாராவது குறி கேட்பார்கள். அதற்க்காகவே நான் அந்த கோவில் போகவே பயப்படுவேன். 

கோவில் உற்சவம்ன்னா காப்பு கட்டி பத்து நாட்கள் அந்தத் தெருவில் யாரும் இரவில் வெளியில் தங்கக் கூடாதுன்னு சொல்வார்கள். அந்த செய்தியே திகிலா இருக்கும்

அலகு குத்துவது, தீ மிதிப்பதுன்னு எல்லாமும் உண்டு. ஒரே ஒரு முறை கட்டைகளை அடுக்குவது முதல், தீ நன்கு கனன்று எரிந்து அடங்கி, கரிபோல மாறியது வரை பார்த்தது நினைவில் இருக்கு. அதுக்கு பிறகு தீ மிதிப்பையும் பார்த்தேன்.

ஞாயிறு மதியத்தில் துர்கைக்கு விளக்கேற்ற அம்மாவுடன் செல்வேன். அங்கு கூட்டமாக பெண்கள் பாடும் அனைத்து ராகுகால பாட்டும் எனக்கு மிகப்பிடித்தவை.

பள்ளி நாட்கள்:
லேடி வெல்லிங்டன் சீமாட்டி மேல் நிலைப் பள்ளி. அரசு பள்ளி. Yes, I  am a proud government school & college student.  எல்லாரையும் போல மறக்கவே முடியாத பசுமையான பள்ளி நாட்கள். ஆங்கிலேயர் காலத்து பள்ளிக் கட்டிடம். பெரிய்ய்ய் பள்ளி. விஸ்தாரமான, காற்றோட்டமுள்ள பள்ளி அறைகள் (சிலவற்றைத் தவிர) . பெரிய்ய்ய் play grounds. Excellent teachers. அவ்ளோ அருமையா பாடம் நடத்துவார்கள். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ன்னு ஒவ்வொரு ஆசிரியருமே experts in their subjects. No comments about computer sir though, ahem.. ahem. கழிவறை தவிர அனைத்துமே தரம்.

விவேகானந்தா இல்லம் அப்போது, நான் படித்த காலத்தில், சாதாரணமாக இருந்தது. எங்களது ஏழாவது வகுப்பறைகள் இதன் பக்கத்தில் இருந்ததால், அங்கு சென்று பெரிய பாறைகள் மேல் ஏறி அமர்ந்து சாப்பிடுவோம். பீச் பக்கம் என்பதால், பேய் காற்று வீசும். இப்போது விவேகானந்த இல்லத்தை, பள்ளியிலிருந்து பிரித்து, வேறு நுழைவாயில் வைத்து, சிறப்பாய் செய்து விட்டார்கள்.
        
லேடி வெல்லிங்டன் teachers training college அப்போது மிகப் பிரபலம். வருடா வருடம் அங்கு படிக்கும் அக்காக்கள், எங்களுக்கு பாடம் எடுக்க ஒரு மாதம் வந்துவிடுவார்கள். அந்த நாட்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுடன் அக்கா அக்கா என்று ஆசையாக உரையாடுவோம். இப்போது இதெல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.  

பாட்டு, ஹிந்தி வகுப்புகள்: 
இன்றும் எனது niece மற்றும் மகள், 'எனக்கு எப்படி கன்னடம் பேசத் தெரிகிறது' என்று கேட்பார்கள். நான் பெருமையாக சொல்வேன் "திருவல்லிக்கேணியில் வளர்ந்தால் எல்லா மொழியும் வரும். அங்கு வளரும் எல்லா குழந்தைகளும் பாட்டு, ஹிந்தி வகுப்புகளுக்கு கண்டிப்பாக செல்வார்கள்" என்று.

"ஸ்ரீனிவாசன்" நூலகம் சென்று புத்தகம் எடுத்து படித்த நாட்கள் ஏராளம். படித்ததென்னவோ fictions என்றாலும், லைப்ரரிக்கு போகணும்னா ஒரு பெருமை வந்து விடும். சென்ற வருடம் திருவல்லிக்கேணி சென்றுருக்கையில், 'ஐஸ் ஹவுஸ்' இல் அதே நூலகத்தைப் பார்த்தேன். ஞாயிறு மாலை நேரம் என்பதால் மூடியிருந்தது.          

கடற்கரை:
பல நாட்கள் விடியற்காலையில் அண்ணனுடன் jogging போனது... அருகம்புல் ஜூஸ் குடித்து பிடிக்கலைன்னு சொன்னது... கடற்கரை ஊத்து தண்ணி குடத்தில் பிடித்து சைக்கிளில் கட்டி வீட்டுக்கு அண்ணனுடன் வந்தது... ஏதோ ஓரிரண்டு கிரகிணத்தன்று கடற்கரையில் குளித்தது…

குடியரசு தின அணிவகுப்பு பார்க்க குடும்பத்தோடு விடி காலையிலேயே சென்று, வெயில் படாத பகுதியில் இடத்தை பிடித்து பார்த்தது... நடனக் குழுக்கள் வரும்போது, 'நம்ம கிட்ட டான்ஸ் ஆடமாட்டாங்களா'ன்னு ஆசையா எதிர் பார்த்தது...

கல்லூரி நாட்களில் தோழிகளுடன் மாலையில் கையில் செருப்பைப் பற்றிக் கொண்டு வெதுவெதுப்பான மணலில் நடந்தது... என கடற்கரையை ஒட்டிய நினைவுகள் அனைத்தும் இனிமையானவை.

Pycrafts road:
இந்தத் தெரு பெயரை சரியாக உச்சரிக்கக் கூட தெரியாமல், bycross, paicross இன்னும் என்னென்னவோ உளறிய சிறிய வயது நாட்கள் அவை. வளையல் கடை, ரிப்பன் கடை, பலப்பல நடைப்பாதை கடைகள் என்று இல்லாத பொருட்களே இருக்காது இந்தத் தெருவில். பழைய புத்தகக் கடைகள் பிரசித்தம் அந்நாட்களில். பாதி விலைக்கு நல்ல நல்ல புத்தகங்கள் கிடைக்கும். பள்ளி, கல்லூரி புத்தகங்கள், போட்டி தேர்வுகளின் புத்தகங்கள், ஐந்தாண்டு கேள்வி விடை புத்தகங்கள் என்று எல்லாமும் கிடைக்கும். "விஜய் ஐஸ்"சில் தான் முதன்முதலில் softy ice விற்றார்கள்ன்னு நினைக்குறேன். அந்த சுவை இப்போது இல்லைன்னு தோணியது, சில வருடங்கள் முன்பு சென்றபோது சுவைத்தபோது.

 
ஹோட்டல், சினிமா: 
ரத்னா கபே மிகவும் பிரசித்தம் என்றாலும், restaurant இல் சாப்பிட அனுமதி இல்லாத / சந்தர்ப்பம் வாய்க்காத பள்ளி, கல்லூரி நாட்கள் என்னுடையவை. அதனால் இங்கு அக்காலத்தில் சாப்பிட்ட நினைவு இல்லை. Star, பாரகன், தேவி, சாந்தி இந்த நான்கு தியேட்டரிலும் நடந்தே போய் சினிமா பார்த்த நினைவு சிறிது இருக்கிறது. 

பேருந்துகள்:
Pycrafts ரோடு, கண்ணகி சிலை, ஐஸ் ஹவுஸ் இந்த மூன்று பேருந்து திருத்தத்திலிருந்தும் எங்கு வேண்டுமானாலும் செல்ல பேருந்துகள் உண்டு. பைக், ஆட்டோ வெல்லாம் கட்டுப்படி ஆகாத அந்நாட்களில், எங்கும் செல்ல பேருந்துகள்தான்.  
 
நினைவிடங்கள்: 
விவேகானந்தர் இல்லம், பாரதியார் இல்லம் இதெல்லாம் இப்போது புதுப்பித்து வைத்திருக்கிறார்கள். இடிந்(த்)த நினைவிடங்களில் கண்ணகி சிலையும், சீரணி அரங்கமும் இன்னமும் நினைவில் உள்ளது. கலைவாணர் அரங்கம் இப்போது பிரம்மாண்டமாய் இருக்கிறது போலும். நான் பார்க்கவில்லை. இங்கு சென்று எஸ் வீ சேகர் நாடகம், உலகப் புகழ் பெற்ற magic show (பெயர் நினைவில்லை) பார்த்த நினைவுகள். திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சபா ஒரு இண்டு-இடுக்கில் இருக்கும். அங்கு சென்று கச்சேரிகள், crazy மோகன் நாடகங்கள் பார்த்த நினைவுகள் இருக்கிறது.       

26, கட்டை தொட்டித் தெரு, திருவல்லிக்கேணி:
நான் பிறந்தது முதல் பதினைந்து வருடங்கள் வாழ்ந்தது இந்த ஒண்டு குடித்தன வாடகை வீட்டில்தான். எவ்வளவோ வீடு மாறிய பிறகும், இப்போதும் என் கனவுகளில் அடிக்கடி வருவதும் இந்த வீடுதான். என் அப்பாவுடனான அனைத்து நினைவுகளும் இந்த வீட்டில்தான்.

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ஒரு கடையில், இரவுகளில் சூடான மசாலா பால் கிடைக்கும். இப்ப இருக்கான்னு தெரியலை. சாயங்காலமே பெரிய கடாயில பால் காய்ச்ச ஆரம்பிச்சிடுவாங்க. எதையாவது வாசனைக்கு அரைத்து போடுறதோ, சேர்க்கவோ மாட்டார்கள். வெறும் மிதமான சக்கரை கலந்த பால் +  நிறைய ஏடு - ஒரு cup & saucer இல் தருவார்கள். என் அப்பா saucerஇல் ஊற்றி ஆறவைத்து எனக்கு கொடுப்பார். மிக மிக ருசியாக இருக்கும்.  

ஒண்டு குடித்தன வீட்டில் அனைவருமே ஒரு குடும்பம் போலத்தான் பழகுவார்கள். நாங்கள் வசித்த தெருவில் மற்ற 4-5 வீடுகளும் எங்கள் உறவுகள் போலத்தான். எனவே வளரும் பருவத்தில் எனக்கு நிறைய அக்காக்கள் க்கள், அண்ணாக்கள், தோழிகள் இருந்தார்கள். அவர்களுடன் பகிர்ந்து கொண்ட நாட்கள் அனைத்தும் மிகப் பசுமையானவை. UPS இருந்திராத அந்த காலத்தில், power போய் விட்டால், அனைவரும் வெளியில் வந்து வம்படிப்பார்கள். எனக்கு மிகவும் பிடித்ததில் இதுவும் ஒண்ணு.

இவை அனைத்தும் நினைவில் நின்றவற்றில் சிலவே. பொம்மைகளோ, வித வித ஆடை அணிகளோ, உணவக சாப்பாடோ கிடையாது. முதன் முதலில் tube light, மின்விசிறி, பீரோ, gas connection, மிதிவண்டி, டிவி வாங்கிய நாட்கள் இன்னும் பசுமையாய் மனதில் இருக்கின்றது. 

இதையெல்லாம் இப்போது மிஸ் செய்கிறேன். சிலசமயம் இவற்றை என் மகளுடன் பகிர்வேன். என் மகளுக்கு  இந்த அனுபவமெல்லாம் இல்லை. அதனால் அவள் அதை miss செய்யவும் போவதில்லை. ஆனால் அவளுக்கும் இது போன்று ஒரு அனுபவமிக்க சிறுபிரயாயம் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். அவளது நாற்பது வயதில் இதுபோன்று எதை எழுதுகிறாள் என்று பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment