November 20, 2021

I am a harmless fake id on social medias



சமூக வலைதளங்களில் Fake id அல்லது முகம் / அடையாளம் மறைக்கும் மக்கள் சிலபேருக்கு திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல சம்பவம் சிலசமயம் நடந்து விடுகிறது. அப்படி எனக்கு நடந்த சம்பவங்கள் இவை.


சம்பவம் 1, 1a, 1b etc:

பல தமிழ் எழுத்தாளர்களை FBல் பின் தொடர் கிறேன். அவர்கள் சில சமயம் சுவாரஸ்ய போட்டிகள் வைக்கிறார்கள். அல்லது அவர்களின் நூல்களின் வாசித்தால், விமர்சனம் எழுதி அவர்களுக்கு அனுப்பத் தோணும். நான் அடையாளம் மறைத்தே இருந்தாலும் சமூகத் தளங்களில் அவர்களை அணுக ஒரு தயக்கம் இருக்கும். மிகச் சிலமுறை ஓரிரு எழுத்தாளர்களுக்கு ஈமெயிலில் புத்தக விமர்சனம், போட்டிகளில் பங்கேற்பு என அனுப்பியுள்ளேன். அவர்களும் ஓரிரு முறை, என் ஈமெயில் ஐடியை மறைத்து, அவர்களின் FB பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். அதையும் மூச்சு காட்டாமல் ஒளிந்தே பார்ப்பேன். "மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன"ன்னு அந்த FB post என்னைப் பார்த்து கேக்குறா மாதிரியே இருக்கும்.


சம்பவம் 2:

சென்ற வருடம் எனது கிட்டத்தட்ட 10 கதை / கட்டுரைகள் விகடன் தளத்தில் வந்த போதும், விகடன் அவற்றை தன் FB பக்கத்தில் ஒவ்வொரு முறையும் வெளியிட்டிருந்த போதும், நான் அதை ஒரு முறை கூட என் FBல் ஷேர் செய்யவில்லை. FBல் எல்லா பக்க உறவினர்களும், நண்பர்களும் என் நட்பில் உள்ளார்களே என்ற தயக்கம்தான் காரணம். "மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்தது இல்லை, நானாக எழுதியது தான்" என்றாலுமே ஒரு தயக்கம்.


சம்பவம் 3:

சென்ற வருடம் எழுத்து பயிற்சி கூகிள் மீட் ஒன்றை எழுத்தாளர் பா ராகவன் அவர்கள் நடத்தினார்கள். இப்போது நடப்பது தொடர் வகுப்புகள் என்று நினைக்கிறேன். ஆனால் அப்போது ஒரே ஒரு செஷன் நடந்தது அவ்வளவுதான். அதுதான் நான் பங்கேற்ற முதல் மற்றும் கடைசி சமூக சந்திப்பு. அதிலும் வீடியோவை அணைத்து, பெயரை மாற்றிக் கலந்து கொண்டேன்.    

கொஞ்சம் interactiveவாகத்தான் வகுப்பு சென்றது. No surprise, I was a silent spectator. பாரா அவர்கள் "யார் எழுத விருப்பப் படுவார்கள் அல்லது யார் எழுதுவார்கள்" என்ற பொருள் வரும்படி ஒரு கேள்வியைக் கேட்டார். பங்கு கொண்ட சில பேர் அவர்களுக்கு தோணியதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். எப்பவும்போல எனக்குத் தயக்கம். ஓரிரு வினாடிகள் யாரும் பேசாமல் அமைதியானபோது நான் அன்மியூட் செய்துகொண்டு "Introverts எழுதுவதை prefer செய்வார்கள்" என்று "எனக்கு" செட் ஆகிறதைச் சொன்னேன்.         

சட்டென்று பாரா அவர்கள் "ஆங், இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தேன். யாரு சொன்னது?" என்றதும், "ஜனனி" என்று நான் “கொடுத்த” பெயரைச் சொன்னேன். "நான் எதிர்பார்த்த பதில் இதுதான். யாரு சொன்னதுன்னு கொஞ்சம் வீடியோ ஆன் செஞ்சி பேசுறிங்களா ம்மா, உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னா" என்று வினவியதும், ஐயையோ, என்னடா செய்யறதுன்னு கொஞ்சம் தயக்கப் பட்டு சில வினாடிகளுக்கு வீடியோ ஆன் செய்து, பாரா அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, அவர் வகுப்பை மேற்கொண்டு தொடர்ந்த போது, வீடியோவை நிறுத்திக் கொண்டேன்.

பள்ளி தினங்களில் ஆசிரியர்கள் கேட்ட கேள்விக்குச் சரியான பதில் அளித்து, அவர்களிடம் பாராட்டு வாங்கிய தருணங்கள்தான் நினைவு வந்தது. சிறிய அங்கீகாரம் கிடைத்தாலும், ஃபேக் ஐடியா வாங்கிக்கறோமேன்னு தோணும். இந்த முறை, முகத்தைத் தெரியப் படுத்தினாலும், பேரை மாற்றிக் கொடுத்திருந்தேன். அப்பவும் ஃபேக் ஐடி ஃபீலிங்தான்.

நாம என்ன வீடியோவையா ஆன் செய்யப் போறோம்னு nightyல தான் அந்த கிளாஸ் attend செய்தேன். எதிர்பாராம வீடியோ ஆன் செய்ய வேண்டியதா ஆயிட்டதால, முகத்தை மட்டும் காட்டுமளவுக்கு கேமரா அருகில் சென்று எல்லோரையும் பயமுறுத்தியது தனி விஷயம்.    

இந்த முகத்தை / அடையாளத்தை காட்டும் தயக்கம் இப்போ இல்லேங்க, தலைவர் ஸ்டைலில் சொல்லனும்னா, "அது கூடவே பொறந்தது, போகவே போகாது". (சரி சரி சலிச்சுக்காதிங்க. மேலே படிங்க.) அவ்வளவு பழசு அந்த தயக்கப் பழக்கம்.


சம்பவம் 4:

சுமார் பதினைந்து வருடத்திற்கு முன்பு நடந்தவை இவை. Ear phone மாட்டிக் கொண்டு, பஸ்ஸில் ஆபிஸ்க்கு போக வர FM கேட்டுக் கொண்டே கழிந்த பசுமையான வருடங்கள் அவை. FMல் பல போட்டிகளுக்கு SMSல் பங்கேற்றால் போதுமானது. பலமுறை அப்படி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அனுப்பியுள்ளேன். அந்த நிகழ்ச்சி முடியும்போதே வெற்றியாளர்களை அறிவித்து விடுவார்கள். "அண்ணாமலை படத்தில் ரஜினியின் பெயர் என்ன?" என்பது போல கடினமான கேள்விகள் அவை. அப்படி ஒரு கடினமான போட்டியில் நான் ஒரே ஒரு முறை (இரண்டு சினிமா டிக்கெட்) வெற்றி பெற்றேன். நிகழ்ச்சியில் என் பெயரை அறிவித்து, நிகழ்ச்சி முடிந்ததும், அந்த RJவே ஃபோன் செய்தார். இப்படி ஒரு callஐ எதிர்பார்த்திராத நான் ஐயையோ என்னடா இதுன்னு பேசி வைத்தேன். அந்த சினிமா டிக்கெட் என் கைக்குக் கிடைக்கவில்லை என்பது தனி விஷயம்.


சம்பவம் 4a:

இன்னொரு முறை, சூரியன் FMல் (என்று நினைவு) நடிகர் நாகேஷ் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. நான் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்த நான் சும்மா இல்லாமல், "எனது அப்பாவும், நாகேஷும் நண்பர்கள்" என்று SMS அனுப்பினேன்.

உடனே என்னை ஃபோனில் அழைத்து விட்டார்கள் அந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த ரெண்டு RJக்களும். "இப்போ பிரேக் முடிஞ்சி நிகழ்ச்சி தொடங்கும்போது, உங்க அப்பாவிற்கும், நாகேஷ் சாருக்கும் நடந்த ஏதாவது ஒரு நிகழ்வு பற்றிச் சொல்ல முடியுமா" னு கேட்டார்கள். ஐயையோ என்னடா செய்யறதுன்னு யோசிச்சு, சரி சொல்லுவோம்னு கீழேயுள்ள நிகழ்வைச் சொன்னேன்.

“நடிகர்கள் நாகேஷ், ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தரராஜன் இவர்களுடன் எனது அப்பாவும் திருவல்லிக்கேணியில் ஒரே மேன்க்ஷனில் தங்கியிருந்தார்களாம். இவர்கள் எல்லோருக்குமே, அவர்களது careerரின் ஆரம்ப நாட்கள் அவை. என் அப்பாவிற்கு சினிமா career இல்லை என்றாலும் இவர்களுக்குள் ஓரளவு நட்பு இருந்திருக்கும் போல. அதனால்தான், பல வருடங்கள் கழித்து திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் இருக்கும் அம்மன் கோயில் அருகில், நடந்து போய்க்கொண்டிருந்திருக்கும் எனது அப்பாவை பார்த்த நாகேஷ் அவர்கள், வண்டியிலிருந்து இறங்கி, ஓரிரு வார்த்தைகள் பேசியுள்ளார். அதற்குள் அங்கு ஒரு சிறு கூட்டம் கூடவே, என் தந்தை சங்கோஜப்பட்டு நழுவி வந்து விட்டிருக்கிறார்.”

இது முகமறியா அடையாளம்ங்குறதால எப்படியோ சொல்லி முடிச்சிட்டேன்.

அவ்ளோதான்!

இப்படி என்னை அடையாளம் காட்டும் எதனிடமிருந்தும் ஒரு தயக்கம். இப்படியே இருந்தா நாளப்பின்ன எனக்கு ஒரு அவார்ட் கொடுத்தாங்கன்னா, அதை எப்படிப் போய் மேடை ஏறி தயக்கமில்லாம வாங்குறதுங்குறதுதான் என்னோட கவலை எல்லாம். என்ன செய்யறது சொல்லுங்க பிரண்ட்ஸ்?!

Update after a couple of days of posting this by tagging PaRa sir. He has posted this on his FB and as usual, I was checking it with anonymous mask.




September 8, 2021

மருதமலை மாமணியே !!

 “காற்றின் மொழி”யை ரசித்து எழுதி விட்டேன்

https://sudhazscribbles.blogspot.com/2021/07/blog-post.html

https://www.vikatan.com/oddities/miscellaneous/love-for-balcony-breeze

"நான் சொல்லும் நேரத்தில் மழை நின்று போகட்டும்" என்று மழையுடனும் உரையாடி விட்டேன்

https://www.vikatan.com/oddities/miscellaneous/conversation-between-woman-and-rain-readers-imagination

இப்போது மலைகளுக்கான நேரம்.



பிரமாண்டமான அடுக்கடுக்கான பர்வதங்களின்

பிரதான மையத்தில் வீற்றிருக்கும்

மருதமலை முருகன் கோவில் ஒரு ஆச்சர்யம்.

விலை மதிப்பில்லாத அரிய கல் பதிந்திருக்கும்

மன்னனின் கிரீடத்தை ஒத்திருக்கும் காட்சி அது.

 

பார்த்தவுடன் மட்டும் அல்ல,

எங்கள் வீட்டு பால்கனியிலிருந்தும்

சன்னல்களிலிருந்தும்

மொட்டை மாடியிலிருந்தும்

தினம் தினம்

பார்க்கப் பார்க்க

இன்னும் இன்னும்

பிடித்துக் கொண்டேதான் போகிறது.

 

மேகங்கள் மூடியும் 

பனி படர்ந்தும்

மழையில் நனைந்தும்

வெயில் பட்டும்

கண்டது மட்டுமல்லாது            

வெயிலும் நிழலும்

பட்டை பட்டையாய்

ஆங்காங்கே

மாறி மாறி

இருப்பதையும் வியந்து களித்தாயிற்று.

 

நழுவித் தவழும் மேகங்களை

தடுத்து நிறுத்தி குளிர்வித்து

தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு மட்டும்

கூடுதல் மழையை பெற்றுத் தந்து இதம் சேர்க்கிறாய்.

  

விடிகாலை காபி உன்னை கண்ணால் பருகிக்கொண்டு,  

மாலை நடை உனது மேற்பார்வையில்,

சமையலும் வீட்டு வேலைகளும் உன்னுடன் பேசிக்கொண்டு

என்று வெகு சீக்கிரம் என் தோழியாகிவிட்டாய்! 


ஒரு நொடி  தூரல், மறு நொடி வெயில்

ஒரு கணம் பேய்க் காற்று, மறு கணம் அடை மழையென

வானிலை அடிக்கடி மாறுவது 

உன்னை நான் வியந்து பார்த்துக்கொண்டே இருக்க

இயற்கை எனக்கு காட்டும் சமிக்கையோ!


இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவை இல்லை!

July 22, 2021

காற்றின் மொழி!


வாயாடி

நாள் கணக்கில்

வேளை தவறாமல்

ஓய்வில்லாமல்

ஊதலடிக்கிறாயே!

உனக்கு வாய் வலிக்கவில்லையா?!


மகள்

விறைப்பான தென்னை மரங்களையே

வீரிய உன் விசையால் அசைத்து விடுகிறாய்.

தென்னை மரங்களும் தளர்ந்து, தன்னை மறந்து

தந்தை தன் மகளிடம் பேசும் குதூகலத்தோடு

தலையை ஆட்டி ஆட்டி உன்னோடு பேசுகிறது.


தோழி

பெண்களின் அடர்ந்த கூந்தலை ஒத்த

இலை கிளைகளையுடைய வேப்ப மரங்களோடு

நீ சேரும்போது

உயிர்த் தோழிகள் இருவர் கலகலப்பாக

பேசி சிரித்து மகிழ்வது போல தோன்றுமெனக்கு.


குறும்பா

ஓயாமல் வீசி மனதை வருடும் உன்னை

உடலால் உணர

சன்னல் கதவுகளைத் திறந்து வைத்தால்,

ஓடியாடி நீ விளையாட

உன் சகாக்கள் தூசு, குப்பைகளுடன்

வந்து விடுகிறாயே!

இது நியாயமா?!

April 24, 2021

Comments received on Vikatan for the short story

The first short story that I wrote is at here - காண்பதெல்லாம் காதலா டி?!

And this was published on Online Vikatan magazine at here - https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-about-mother-daughter-love-my-vikatan

I received some genuine comments from readers, who are unknown to me, they must be Vikatan readers. And I am so surprised and glad that my empathy and imagination with which I wrote the story has touched many souls.

Happyyyyy!


நிலா - கவிதை


சமையலறை சன்னலில் 
எட்டிப் பார்த்து 
"என்ன சமைக்கிறாய்?" என்றது.
சந்திரகலா செய்யப் 
போகிறேன் என்றேன்.
அடுத்த நொடி மேகங்களில் 
ஓடி ஒளிந்தது. 
😂😃

February 10, 2021

The books I liked

எனக்கு பிடித்த புத்தகங்கள்: 

I might have missed some books, though I referred Kindle history to prepare this list. This is not my entire reads list, but my favorites list. They are almost in the order I read - the recent ones on the top. I will try to update the list.


நினைத்தால் நிம்மதி - தென்கச்சி கோ சுவாமிநாதன் 

பசி - நட் ஹாம்சன் - மொழிபெயர்ப்பு: க நா சு

ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள் – மொழிபெயர்ப்பு சுப்புராய நாயகர்

Short Stories - Tolstoy

வேடிக்கை பார்ப்பவன் - நா. முத்துக்குமார்

Almost all Sujatha books available on Kindle Unlimited

ஜெயமோகன் குறுநாவல்கள்

பனி மனிதன் – ஜெயமோகன்

வெட்டாட்டம் - ஷான் கருப்புசாமி

அஞ்ஞாடி - பூமணி (halfway through)

அறம் – ஜெயமோகன்கைப்பிடி அளவு கடல் - பிரமிள்

போக புத்தகம் - போகன் சங்கர்

ஒரு சிறு இசை - வண்ணதாசன் (halfway through)

கிமுகிபி - மதன்

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன்

ஜெயமோகன் சிறுகதைகள்

ஜெயகாந்தன் சிறுகதைகள்

ஆப்பிளுக்கு முன் - சி. சரவணகார்த்திகேயன்

புதுமைப் பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்

My Life: An Illustrated Biography - Abdul Kalam


February 5, 2021

தாமதமான தன்னுணர்வேற்றங்கள்

குறிப்பு: தன்னுணர்வேற்றம் என்றால் ஆங்கிலத்தில் Empathy.

                  

தாமதமான தன்னுணர்வேற்றம் - #1

ஒரு வருடத்திற்கு முன்பு 

எனது மாமி.

ஆறு மாதத்திற்கு முன்பு 

ஒன்று விட்ட சித்தி. 

ஒரு மாதத்திற்கு முன்பு

தூரத்து அண்ணி. 


என் அம்மாவிற்கு இவர்கள்

வாரந்தோறும் தொலைபேசும் 

திடீர் தோழிகளானார்கள்.


மூத்த கைம்பெண்ணான 

என் அம்மா புதியவர்களான 

அவர்களுக்கு ஆறுதல்.


தாமதமான தன்னுணர்வேற்றம் - #2

தன் பதின்ம வயதில் 

பெற்றோரின் சம்மதமின்றி 

அவர்களை தவிக்க விட்டு   

காதல் மணம் செய்த

தோழியை வெறுத்தேன்.


ஆண்டுகள் பல கழிந்த

பின் தான் புரிந்தது

முக்கியமானது மகிழ்ச்சியான 

மண வாழ்க்கை தான் 

அதைத் தந்தது 

காதலா பெற்றோரா என்பதல்ல.

January 2, 2021

காண்பதெல்லாம் காதலா டி?!

அன்பே!

என் நினைவுகளில் நீ

என் கனவுகளிலும் நீ

நான் சமைக்கும் சமையலில் நீ

நான் பேசும் பேச்சிலும் நீ

என் நடையில் நீ    

என் உடையிலும் நீ

நான் முகம் பார்க்கும் கண்ணாடியும்,

என்னை விட்டு உன்னைத்தான் காட்டுகிறது.

♡♡♡♡♡ ஸ்ரீலக்ஷ்மி விஷ்ணுவர்த்தன் ♡♡♡♡♡


என்ற என் மகள் எழுதிய காதல் கவிதை முதல்முறையாக விகடன் தளத்தில் பிரசுரமாகியிருந்தது. அவளுக்கு கவிதை / கட்டுரை எல்லாம் எழுத வரும் என்பதே, அவள் தன் காதல் கணவனை கை பிடித்த பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது.

வாட்ஸப்பில் லிங்க் அனுப்பி, இப்போதுதான் அலை பேசினாள். மாப்பிள்ளை வேலை விஷயமாக வெளியூர் போவதால், வார இறுதியில் இங்கு வருகிறாளாம். எனக்கு சட்டென்று வாழ்க்கை சுறுசுறுப்பானதைப் போல இருந்தது.

என் கணவர் எங்கள் இருவரது அலைபேசியிலும், வாட்ஸப் ஸ்டேட்டஸாக, அவள் கவிதை லிங்க்'ஐ வைத்து விட்டு, "அவளுக்கு திரட்டிப் பால் ரொம்ப பிடிக்குமே, அதை செஞ்சிடு. அப்படியே அந்த ரிப்பன் பக்கோடாவும் செஞ்சிடு. இந்த முறையாவது "யாரி"க்கு அவளை அழைச்சிட்டு போகணும். அவ கணவருக்கு நார்த்-இந்தியன் உணவு பிடிக்காதுன்னு, போன முறை வந்தப்போ வேணாம்னுட்டா. சுகன்யாகிட்ட சொல்லிடு. பள்ளித் தோழிகள்… என்னவோ சொல்லுவாங்களே… ஆங்... பெஸ்டீஸ்... பெஸ்டீஸ் ரெண்டு பேரும் எங்கயாவது வெளிய போணும்னா போயிட்டு வரட்டும்" என்று அடுக்கிக்கொண்டே இருந்தார். தன் தம்பியின் ஃபோன் வரவே "ஆமாண்டா, கவிதை படிச்சியா? எப்பிடி இருந்தது? அவ ஒரு ப்ளாக் ஆரம்பிச்சாளே, அது தெரியுமில்ல? இன்னும் நிறைய எழுதுறா அதுல…" என்று பேசிக்கொண்டே மாடிக்கு சென்று விட்டார்.

நான் என் மகளின் நினைவுகளில் மூழ்கினேன். ஒரே மகள். செல்லமாய் வளர்த்தோம். எல்லாமே அவள் விருப்பம்தான். படிப்பு, பாட்டு, சமையல், வீணை, கை வேலைகள்ன்னு எல்லாத்துலயும் சுட்டி. படிப்பு முடிந்து சென்னையில் வேலை கிடைக்க, "கோவைல வாழ்ந்தவங்களுக்கு வேறு எங்கும், முக்கியமா சென்னை, செட் ஆகாது" ன்னு (இங்க வழக்கமா எல்லோரும் சொல்லுறதை) சொல்லிப் பார்த்தோம். ஆனா அவ அடம் பிடித்து, பெண்கள் விடுதியில் தங்கி இரண்டு வருடம் சென்னையில் வேலை பார்த்தாள்.

ஊர் புதியது. வேலை புதியது. மக்கள் புதியவர்கள். இந்த தலைமுறை குழந்தைகள் சாமார்த்தியமானவர்கள். அதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள். என் மகளும் எல்லாவற்றையும் பழக்கிக் கொண்டாள், கற்றுக் கொண்டாள். எங்களுக்கும் பெருமையாக இருந்தது.      

கூட வேலை பார்க்கும் விஷ்ணுவையே, இரு வீட்டு சம்மததத்துடன் காதல் திருமணம் செய்தாள். விஷ்ணுவர்த்தன். நல்ல பிள்ளை. என் மகளை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறார்.        

திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு, விஷ்ணுவிற்கு பெங்களூரில் வேறு வேலை கிடைத்து விட்டதில், இவள் தன் கேரியர்'ஐ நினைத்து முதலில் சிறிது ஏமாற்றமடைந்தாள். திருமணத்திற்கு பிறகு பெங்களூரிலேயே வேறு வேலை பார்த்துக்கலாம்னு விஷ்ணு சொன்னதும் சமாதானமடைந்தாள். சொன்னாமாதிரியே பின்பு ஒரு வேலையும் கிடைத்தது. ஆனால் "சனிக்கிழமை எனக்கு வேலை உண்டு, அவருக்கு விடுமுறை. வெளியே எங்கயாவது போணும்னா முடியலை மா. அதனால வேலைய விட்டுட்டேன்" என்றாள் தொலைபேசியில்.

பொழுது போவதற்காகத்தான் ஒரு ப்ளாக் ஆரம்பித்து, கட்டுரை, கவிதைன்னு எழுத ஆரம்பித்தாள். வித விதமாக சமையல் செய்வாள். வார இறுதி ஆச்சுன்னா போதும், ரிசார்ட், சினிமா இல்ல வேற எங்கயாவது போய்விடுவார்கள். எல்லா போட்டாவையும் அனுப்புவாள். காதல் மணம், அன்பான கணவர், தனிக்குடித்தனம், வாரா வாரம் எங்காவது ஒரு ட்ரிப் என்று கனவு வாழ்க்கையைத்தான் வாழ்கிறாள் மகள்னு அப்பப்போ இவர் சொல்லி மகிழ்வார்.     

வார இறுதியும் வந்தது. மகளும் வந்தாள். திருமணத்திற்கு பிறகு, முதன்முறையாக தனியாக வந்துள்ளாள். "அம்மா இந்த முறை நாந்தான் எல்லாம் சமைக்க போறேன். உனக்கு ரெஸ்ட். அப்பா, பேங்க், போஸ்ட் ஆபிஸ் வேலை ஏதாவது இருந்தா சொல்லுங்க, நாளைக்கு போவோம்" என்றாள். திருமணத்திற்கு பிறகு பொறுப்பு இன்னும் கூடி இருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.

இரவு சாப்பிட்ட பிறகு, அவர் சற்று வெளியே செல்கிறேன் என்று கிளம்பி விட, நான் மறுநாளுக்காக கீரை ஆய உட்கார்ந்தேன். மகளும் அவள் கணவரிடம் தொலைபேசி விட்டு வந்தவள், "இதெல்லாம் நாளைக்கி செஞ்சிக்கலாம் விடு. கொஞ்ச நேரம் உன் மடில படுத்துக்கறேன்" என்று  படுத்தாள்.

நான் அவள் தலையை கோதியபடி மெதுவாக "எல்லாருக்கும் ரொமான்டிக்'கா தெரியுற கவிதை, எனக்கு மட்டும் வேற மாதிரி தெரியுதே டா!" என்றேன். 

"என்ன மா சொல்ற?" லேசாக அதிர்ந்து என்னை பார்த்தாள்.

"ஆமாண்டி. எனக்கு என்னமோ எல்லா விஷயத்திலும் டாமினேட் செய்யும் கணவரைப்பத்திதான் அந்த கவிதையோன்னு தோணிச்சி.” அவள் அமைதியாய் இருக்கவே நான் தொடர்ந்தேன். “தினமும் எங்க கிட்ட பேசறியே தவிர, அதுல முன்னமாதிரி ஒரு லைவ்லிநெஸ் இல்ல. நீ டிரஸ் செய்யும் விஷயத்தில் நிறைய மாற்றங்கள். இந்தியன் தவிர வேற எந்த க்யுசினும் உனக்கு பிடிக்காது. ஆனா வாரா வாரம் நீங்க வெளிய போகும்போது, மாப்பிள்ளைக்கு பிடிச்சதுதான் சாப்பிடுவிங்க போல! போட்டோல பாக்கும்போது தெரிஞ்சிக்கிட்டேன். ஏதோ ஒரு காரணம் சொல்லி வேலைக்கு போக மாட்டேங்குற, இல்ல வேலை தேட மாட்டேங்குற. மாப்பிள்ளை கூட இருக்கும்போது, உன் இயல்புலையே நீ இருக்க மாட்டேங்குற. சுகன்யாவும் சொன்னா. முன்ன மாதிரி நீ வாட்ஸப் குரூப்ல சாட் செய்யுறதில்லைன்னு. என்னடா ஆச்சு உனக்கு?".

சில நொடிகள் அதிர்ச்சியான மௌனத்திற்கு பின், “அம்மா” என்று கேவி என் மடியில் அழத் தொடங்கினாள்.