February 10, 2021

The books I liked

எனக்கு பிடித்த புத்தகங்கள்: 

I might have missed some books, though I referred Kindle history to prepare this list. This is not my entire reads list, but my favorites list. They are almost in the order I read - the recent ones on the top. I will try to update the list.


நினைத்தால் நிம்மதி - தென்கச்சி கோ சுவாமிநாதன் 

பசி - நட் ஹாம்சன் - மொழிபெயர்ப்பு: க நா சு

ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள் – மொழிபெயர்ப்பு சுப்புராய நாயகர்

Short Stories - Tolstoy

வேடிக்கை பார்ப்பவன் - நா. முத்துக்குமார்

Almost all Sujatha books available on Kindle Unlimited

ஜெயமோகன் குறுநாவல்கள்

பனி மனிதன் – ஜெயமோகன்

வெட்டாட்டம் - ஷான் கருப்புசாமி

அஞ்ஞாடி - பூமணி (halfway through)

அறம் – ஜெயமோகன்கைப்பிடி அளவு கடல் - பிரமிள்

போக புத்தகம் - போகன் சங்கர்

ஒரு சிறு இசை - வண்ணதாசன் (halfway through)

கிமுகிபி - மதன்

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன்

ஜெயமோகன் சிறுகதைகள்

ஜெயகாந்தன் சிறுகதைகள்

ஆப்பிளுக்கு முன் - சி. சரவணகார்த்திகேயன்

புதுமைப் பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்

My Life: An Illustrated Biography - Abdul Kalam


February 5, 2021

தாமதமான தன்னுணர்வேற்றங்கள்

குறிப்பு: தன்னுணர்வேற்றம் என்றால் ஆங்கிலத்தில் Empathy.

                  

தாமதமான தன்னுணர்வேற்றம் - #1

ஒரு வருடத்திற்கு முன்பு 

எனது மாமி.

ஆறு மாதத்திற்கு முன்பு 

ஒன்று விட்ட சித்தி. 

ஒரு மாதத்திற்கு முன்பு

தூரத்து அண்ணி. 


என் அம்மாவிற்கு இவர்கள்

வாரந்தோறும் தொலைபேசும் 

திடீர் தோழிகளானார்கள்.


மூத்த கைம்பெண்ணான 

என் அம்மா புதியவர்களான 

அவர்களுக்கு ஆறுதல்.


தாமதமான தன்னுணர்வேற்றம் - #2

தன் பதின்ம வயதில் 

பெற்றோரின் சம்மதமின்றி 

அவர்களை தவிக்க விட்டு   

காதல் மணம் செய்த

தோழியை வெறுத்தேன்.


ஆண்டுகள் பல கழிந்த

பின் தான் புரிந்தது

முக்கியமானது மகிழ்ச்சியான 

மண வாழ்க்கை தான் 

அதைத் தந்தது 

காதலா பெற்றோரா என்பதல்ல.

January 2, 2021

காண்பதெல்லாம் காதலா டி?!

அன்பே!

என் நினைவுகளில் நீ

என் கனவுகளிலும் நீ!

நான் சமைக்கும் சமையலில் நீ

நான் பேசும் பேச்சிலும் நீ!

என் நடையில் நீ    

என் உடையிலும் நீ!

நான் முகம் பார்க்கும் கண்ணாடியும்,

என்னை விட்டு உன்னைத்தான் காட்டுகிறது!!

♡♡♡♡♡ ஸ்ரீலக்ஷ்மி விஷ்ணுவர்த்தன் ♡♡♡♡♡


என்ற என் மகள் எழுதிய காதல் கவிதை முதல்முறையாக விகடன் தளத்தில் பிரசுரமாகியிருந்தது. அவளுக்கு கவிதை / கட்டுரை எல்லாம் எழுத வரும் என்பதே, அவள் தன் காதல் கணவனை கை பிடித்த பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது.

வாட்ஸப்பில் லிங்க் அனுப்பி, இப்போதுதான் அலை பேசினாள். மாப்பிள்ளை வேலை விஷயமாக வெளியூர் போவதால், வார இறுதியில் இங்கு வருகிறாளாம். எனக்கு சட்டென்று வாழ்க்கை சுறுசுறுப்பானதைப் போல இருந்தது.

என் கணவர் எங்கள் இருவரது அலைபேசியிலும், வாட்ஸப் ஸ்டேட்டஸாக, அவள் கவிதை லிங்க்'ஐ வைத்து விட்டு, "அவளுக்கு திரட்டிப் பால் ரொம்ப பிடிக்குமே, அதை செஞ்சிடு. அப்படியே அந்த ரிப்பன் பக்கோடாவும் செஞ்சிடு. இந்த முறையாவது "யாரி"க்கு அவளை அழைச்சிட்டு போகணும். அவ கணவருக்கு நார்த்-இந்தியன் உணவு பிடிக்காதுன்னு, போன முறை வந்தப்போ வேணாம்னுட்டா. சுகன்யாகிட்ட சொல்லிடு. பள்ளித் தோழிகள்… என்னவோ சொல்லுவாங்களே… ஆங்... பெஸ்டீஸ்... பெஸ்டீஸ் ரெண்டு பேரும் எங்கயாவது வெளிய போணும்னா போயிட்டு வரட்டும்" என்று அடுக்கிக்கொண்டே இருந்தார். தன் தம்பியின் ஃபோன் வரவே "ஆமாண்டா, கவிதை படிச்சியா? எப்பிடி இருந்தது? அவ ஒரு ப்ளாக் ஆரம்பிச்சாளே, அது தெரியுமில்ல? இன்னும் நிறைய எழுதுறா அதுல…" என்று பேசிக்கொண்டே மாடிக்கு சென்று விட்டார்.

நான் என் மகளின் நினைவுகளில் மூழ்கினேன். ஒரே மகள். செல்லமாய் வளர்த்தோம். எல்லாமே அவள் விருப்பம்தான். படிப்பு, பாட்டு, சமையல், வீணை, கை வேலைகள்ன்னு எல்லாத்துலயும் சுட்டி. படிப்பு முடிந்து சென்னையில் வேலை கிடைக்க, "கோவைல வாழ்ந்தவங்களுக்கு வேறு எங்கும், முக்கியமா சென்னை, செட் ஆகாது" ன்னு (இங்க வழக்கமா எல்லோரும் சொல்லுறதை) சொல்லிப் பார்த்தோம். ஆனா அவ அடம் பிடித்து, பெண்கள் விடுதியில் தங்கி இரண்டு வருடம் சென்னையில் வேலை பார்த்தாள்.

ஊர் புதியது. வேலை புதியது. மக்கள் புதியவர்கள். ஆனால் இந்த தலைமுறை குழந்தைகள் சாமார்த்தியமானவர்கள். அதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள். என் மகளும் எல்லாவற்றையும் பழக்கிக் கொண்டாள், கற்றுக் கொண்டாள். எங்களுக்கும் பெருமையாக இருந்தது.      

கூட வேலை பார்க்கும் விஷ்ணுவர்த்தன் -ஐ, இரு வீட்டு சம்மததத்துடன் காதல் திருமணம் செய்தாள். விஷ்ணு, நல்ல பிள்ளை. என் மகளை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறார்.        

திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு, விஷ்ணுவிற்கு பெங்களூரில் வேறு வேலை கிடைத்து விட்டதில், இவள் தன் கேரியர்'ஐ நினைத்து முதலில் சிறிது ஏமாற்றமடைந்தாள். திருமணத்திற்கு பிறகு பெங்களூரிலேயே வேறு வேலை பார்த்துக்கலாம்னு விஷ்ணு சொன்னதும் சமாதானமடைந்தாள். சொன்னாமாதிரியே பின்பு ஒரு வேலையும் கிடைத்தது. ஆனால் "சனிக்கிழமை எனக்கு வேலை உண்டு, அவருக்கு விடுமுறை. வெளியே எங்கயாவது போணும்னா முடியலை மா. அதனால வேலைய விட்டுட்டேன்" என்றாள் தொலைபேசியில்.

பொழுது போவதற்காகத்தான் ஒரு ப்ளாக் ஆரம்பித்து, கட்டுரை, கவிதைன்னு எழுத ஆரம்பித்தாள். வித விதமாக சமையல் செய்வாள். வார இறுதி ஆச்சுன்னா போதும், ரிசார்ட், சினிமா இல்ல வேற எங்கயாவது போய்விடுவார்கள். எல்லா போட்டாவையும் அனுப்புவாள். "காதல் மணம், அன்பான கணவர், தனிக்குடித்தனம், வாரா வாரம் எங்காவது ஒரு ட்ரிப் என்று கனவு வாழ்க்கையைத்தான் வாழ்கிறாள் மகள்" என்று அவ்வப்போது இவர் சொல்லி மகிழ்வார்.     

வார இறுதியும் வந்தது. மகளும் வந்தாள். திருமணத்திற்கு பிறகு, முதன்முறையாக தனியாக வந்துள்ளாள். "அம்மா இந்த முறை நாந்தான் எல்லாம் சமைக்க போறேன். உனக்கு ரெஸ்ட். அப்பா, பேங்க், போஸ்ட் ஆபிஸ் வேலை ஏதாவது இருந்தா சொல்லுங்க, நாளைக்கு போவோம்" என்றாள். திருமணத்திற்கு பிறகு பொறுப்பு இன்னும் கூடி இருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.

இரவு சாப்பிட்ட பிறகு, அவர் சற்று வெளியே செல்கிறேன் என்று கிளம்பி விட, நான் மறுநாளுக்காக கீரை ஆய உட்கார்ந்தேன். மகளும் அவள் கணவரிடம் தொலைபேசி விட்டு வந்தவள், "இதெல்லாம் நாளைக்கி செஞ்சிக்கலாம் விடு. கொஞ்ச நேரம் உன் மடில படுத்துக்கறேன்" என்று  படுத்தாள்.

நான் அவள் தலையை கோதியபடி மெதுவாக "எல்லாருக்கும் ரொமான்டிக்'கா தெரியுற கவிதை, எனக்கு மட்டும் வேற மாதிரி தெரியுதே டா!" என்றேன். 

"என்ன மா சொல்ற?" லேசாக அதிர்ந்து என்னை பார்த்தாள்.

"ஆமாண்டி. எனக்கு என்னமோ எல்லா விஷயத்திலும் டாமினேட் செய்யும் கணவரைப்பத்திதான் அந்த கவிதையோன்னு தோணிச்சு.” அவள் அமைதியாய் இருக்கவே நான் தொடர்ந்தேன். “தினமும் எங்க கிட்ட பேசறியே தவிர, அதுல முன்னமாதிரி ஒரு லைவ்லிநெஸ் இல்ல. நீ டிரஸ் செய்யும் விஷயத்தில் நிறைய மாற்றங்கள். இந்தியன் தவிர வேற எந்த க்யுசினும் உனக்கு பிடிக்காது. ஆனா வாரா வாரம் நீங்க வெளிய போகும்போது, மாப்பிள்ளைக்கு பிடிச்சதுதான் சாப்பிடுவிங்க போல! போட்டோல பாக்கும்போது தெரிஞ்சிக்கிட்டேன். ஏதோ ஒரு காரணம் சொல்லி வேலைக்கு போக மாட்டேங்குற, இல்ல வேலை தேட மாட்டேங்குற. மாப்பிள்ளை கூட இருக்கும்போது, உன் இயல்புலையே நீ இருக்க மாட்டேங்குற. சுகன்யாவும் சொன்னா. முன்ன மாதிரி நீ வாட்ஸப் குரூப்ல சாட் செய்யுறதில்லைன்னு. என்னடா ஆச்சு உனக்கு?".

சில நொடிகள் அதிர்ச்சியான மௌனத்திற்கு பின், “அம்மா” என்று கேவி என் மடியில் அழத் தொடங்கினாள்.