November 28, 2026

உரி - புத்தக மதிப்புரை



எமது ஆசிரியர் எழுத்தாளர் திரு பா ராகவன் அவர்கள் எழுதியிருக்கும் சமீபத்திய நாவல் "உரி".

புத்தகத்தின் மதிப்புரையும், என் வாசிப்பனுபவத்தையும் இதில் எழுதி இருக்கிறேன்.

ராஜராஜ சோழன் காலத்துக் கதைக் களம். தஞ்சை பெரிய கோயில் கட்டிய காலத்தில் நடக்கும் கதை. இது ஒரு புனை கதைதான். ஆனால் வரலாற்று உண்மை சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதிய புனைவு. இந்தக் கலவைதான் இதைச் சுவாரஸ்யமாக்குகிறது.

*

தஞ்சை பெரிய கோயிலின் திறப்பு விழாவும் குடமுழுக்கும் நடைபெறும் நாளில், அக்கோவிலை அழிக்க யாரோ திட்டம் தீட்டியிருப்பதாகக் கருவூர் சித்தர் சந்தேகப்படுகிறார். பதினெண் சித்தர்களில் ஒருவரான அவர், இதை முன்கூட்டியே கணிக்கிறார். 

சார்வாகன் என்பவன்தான் நம் கதை நாயகன். அது அவனுடைய பெயரல்ல. நாத்திகன் என்பதற்கு அக்காலத்தில் பயன்படுத்திய வார்த்தை. சொந்த பந்தம் வீடு படிப்பு சுத்தம் குளியல் ஒன்றும் அறியாத புலையனாக வருகிறான்.        

நமக்கு இக்கதையை ஒரு "சொல்"தான் சொல்கிறது. 

இந்த மூவரும்தான் கதையின் அதி முக்கிய பாத்திரங்கள். இவர்களைத் தவிர உனுமானி நாயனார் என்னும் சித்தர், வேட்டன், மயூரமுகி, தத்தன் போன்றவர்கள் முக்கிய பாத்திரத்தில் வருகிறார்கள். 

இவர்களெல்லாம் எப்படி இணைகிறார்கள்? எதிரி யார்? எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? குடமுழுக்கு நாளன்று என்ன நடந்தது? எல்லாம் சுபமாக முடிந்ததா என்பதுதான் கதை. 

*

கதை சுருக்கத்தைத் தெளிவாக நான் கூறியிருந்தாலும், நாவல் தொடங்கியது முதல் நம்முடைய முழு கவனத்தையும் கோரும். மொழியுமே 11ம் நூற்றாண்டில் பயன்படுத்திய சில சொற்களோடு கடினமாக இருக்கும். கதையும் கொஞ்சம் நமக்குப் பழகும் வரை புரிந்துகொள்ளச் சவாலாக இருக்கும். அதாவது, எனக்கு அப்படி இருந்தது.

ஆனால் முதல் அத்தியாயத்திலிருந்து முடிவு வரை சுவாரஸ்யங்களுக்கும், திருப்பங்களும் குறைவிருக்காது. விளையாட்டான கதை போலத் தொடக்கத்தில் தோன்றும். ஆனால் அத்தனை அர்த்தம் பொதிந்த வசனங்கள், இக்காலத்திற்கும் தேவையான கருத்துக்கள் என்று மிகவும் தீவிர சிந்தனைகள் அடங்கிய நாவல்.

*

பரபரப்பான உச்சகட்டக் காட்சிகளுடன் நாவல் முடியும். அப்போது நான் உணர்ந்தது ஒன்று. அதை மதிப்புரையில் எழுதினேன். ஆனால் சரியாக ஒருநாள் கழித்து, என் எண்ணம் வேறாகி இருந்தது. காரணம் நாவல் நம் எண்ணத்திலிருந்து அகல மறுக்கிறது. அதையே அசை போட்டுக் கொண்டிருந்ததால், பல கேள்விகள் நமக்கு எழுகிறது. அதையும் ஆசிரியருக்கு எழுதி அனுப்பினேன். 

இப்படி மாற்றி மாற்றி நான் எனக்குள்ளேயே யோசிப்பேன் என்றோ, ஒரு நாவல் இப்படி எல்லாம் யோசிக்க வைக்கும் என்றோ நான் நினைத்ததுக்கூட பார்த்ததில்லை.

ஆக மொத்தத்தில், எனக்கொரு அற்புத வாசிப்பனுபவமாக இருந்தது.

*

இந்த நாவலைப் படித்து முடிக்கும்போது, தஞ்சை பெரிய கோயிலுக்குச் செல்லும் ஆவல் அதிகரித்துவிட்டது. கருவறையில் சார்வாகனைத் தேடுவேனோ என்னவோ! நிருதியின் சந்நிதியை நிச்சயம் போய் பார்ப்பேன். பெரிய மரமும், வேட்டனும் கோவிலைச் சுற்றி எங்கு மறைவாக இருக்கிறார்களோ என்று ஆராய்வேன். கருவூராரைப் பற்றி ஏதேனும் செய்தி கோவிலுக்குள் இருக்கிறதா என்று தேடுவேன். தத்தன் புனைவாக இல்லாமல் இருந்தால், அவனைப் பற்றியும் தெரிந்துகொள்ள நினைப்பேன்.      

*

ஆசிரியருடைய இணைய இதழான "மெட்ராஸ் பேப்பர்" -ல் இந்த நாவலை வாசித்தேன். 

நாளுக்கு ஒன்று, வாரத்திற்கு ஐந்து என்று அத்தியாயங்களை ஆசிரியர் வெளியிட்டார். மொத்தம் 190 அத்தியாயங்கள். 38 வாரங்கள். 9 மாதங்கள். மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சொற்கள்.

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் படித்து மதிப்புரை (review) எழுதினேன். மதிப்புரையை போட்டிகாகத்தான் எழுதத்  தொடங்கினேன். ஆனால் கதையின் மீதிருந்த ஈர்ப்பினால் முழுதாக எழுதி முடித்தேன். 

உரி இப்போது புத்தகமாக வெளியாக இருக்கிறது. முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.