December 10, 2023

குளிர்காலம்


முகில் கூடிய 

மந்த வானம்.

மங்கிய ஒளியில் 

மங்கலான பகல்கள்.


அசைவிற்குக் கூட 

காற்றில்லை

ஆனால் குளிருக்கு ஒன்றும் 

குறைவில்லை.


கதிரவனையும், காற்றையும் 

காணாமல் தவிக்கும் 

பிரம்மாண்ட மலைகளுக்கு ஆதரவாய், 

இயற்கை இறங்கிவந்து

மூடுபனியைப் போர்த்தி அரவணைக்கிறது.


காயும் வெயிலும்  

பெய்யும் மழையும்  

வீசும் காற்றும் 

மக்களுக்குப் போதுமென்று, 

குளிரையும் குதூகலத்தையும்

இணைத்து இறைக்க 

இதோ வந்துவிட்டது 

கூதிர்காலம்.


#


ஏ பனியே!

நீ கனிந்து 

நுனிப்புல் மேய்வதும், 

உனது தொனியால், 

புல் குனிந்து நாணுவதும், 

நாள்தோறும் நாங்கள் கண்டு

ரசிக்கும் ரம்மியக் காட்சியாகிவிட்டது!


பச்சை மலைகளை 

பால் மலைகளாக்குகிறாய்.

பல சமயம் 

கண்ணுக்கே தெரியாதவண்ணம் 

மாயமாக்குகிறாய்.   


#


சூரியனைச் சில வாரமாக

வீரியமாய் பார்க்காத 

ஆகாயத்தின் ஆற்றாமையா? 


அதனால்     

வான்வெளி விசும்புகிறதா?  

அதுதான்  

பனித்துளியாய் பெய்கிறதா? 


அந்த வேதனைத் துளிகளா 

மனிதர்களை மகிழ்விக்கிறது?

இதுதான் இயற்கையிடமிருந்து நாம் 

கற்க வேண்டிய பாடமோ?


இல்லை இல்லை. 

இது என் க்ரூர கற்பனையாகவே 

இருக்க முடியும்.


நம்மை மகிழ்விப்பதே  

பனியின் பணியாக இருக்க வேண்டும். 

பனியும் அதன் பணியை 

மகிழ்வாகத்தான் செய்து கொண்டிருக்க வேண்டும்.


#


ஏ பனியே!

உன்னை ரசிக்கத்தானே

மொட்டை மாடியில் நான் நடக்கிறேன். 

ஆனால் என் தலைக்குள் 

நீராய் இறங்கி   

நீயும் நடக்கிறாயே!

இதென்ன போட்டியா?  


இரண்டு மாதம் தானே இருப்பாய் என 

போர்த்திக் கொண்டு தூங்காமல் 

அதிகாலையில் உன்னை ஆராதிக்க முயல்கிறேன்.

ஆனால் நீயோ என் கை விரல்களை உறைய வைக்கிறாய்.

இது நியாயமா?


தீபாவளி இனிப்புகள் காலியாக ஆக

மனதுக்குள் சங்கடம் வருமே 😆!

அதுபோல இன்னும் ஓரிரு மாதங்களில்

நீ சென்றுவிடுவாய் என்றுணர்ந்தே

காலத்தை வீணாக்காமல் 

உன்னைப் பருக பார்க்கிறேன்.

என்னைத் துன்புறுத்தாமல் 

உன்னை ரசிக்கவிடு.


#


மேகக்கூட்டமும் 

பனிமூட்டமும் 

குளிரும் 

சிலிர்ப்பும் 

இலேசான நடுக்கமும்

கூட்டும்

குளிர்காலத்தின் மீதுள்ள  

நம் காதலை!


ஏ பனிக்காலமே!

பகல்களை இன்னும் வெளிர விடு! 

பால்போல மாற்றிவிடு!  


No comments:

Post a Comment