கொட்டித் தீர்க்கும் கனத்த ரகம்
இல்லையென்றாலும்,
நாள் கணக்காய் தொடர்ந்து
ஒரே சீராகப் பெய்கிறது மழை.
விட்டு விட்டு மழை,
சீரான அதன் சாரல்;
பலத்த காற்று,
ஓயாத அதன் ஊதல்;
மேகங்களிலும் மூடுபனியிலும்
ஒளிந்து விளையாடும் மலைகள்;
உறைக்கும் குளிர்;
இவற்றைக் குழைத்துத் தருகிறது
பருவமழை.
ஆடிக் காற்றோடு
சோடி சேர்ந்து
குளிரைக் கூட்டுகிறது.
வீட்டு வேலைகள் செய்கையில்
குளிர்வதில்லை;
அலுவல் பணிக்கு அமர்கையில்
குளிர்கிறது.
நீ என்ன ஒரு பேரினவாதியா?
பால்கனி சன்னல் கதவுகளை மூடி,
பாய்ந்து வரும் காற்றை, குளிரை
தடுக்க மனமிருப்பதில்லை.
இம்மழை காலத்தை,
இயல்பாக கடக்க முயல்கிறேன்.
இதமாக எதிர்கொள்ள எத்தனிக்கிறேன்.
ஆனால்,
சில்லென்ற காற்றை
சிலிர்த்துக் கொண்டுதான்
சிலாகிக்க முடிகிறது.
"மிகவும் சில்'லென்று இருக்கிறது,
போதும், செல்", என்றேன்.
சட்டென 'சோ'வென்று பெய்து, என்னைப் பார்த்து
கொல்லென்று சிரிக்கிறது
மழை! பருவ மழை!!
Superb..
ReplyDeleteNice one
ReplyDelete