December 29, 2024

தவப்புதல்வி - My first published book


மகளின் பிறந்த நாளிற்கு மூன்று மாதங்கள் முன்பு, திடீரென்று தோன்றிய எண்ணத்தால், அவளைப் பற்றி, நான் ஏற்கனவே எழுதிய பல குறிப்பு / பதிவுகளை வைத்து ஒரு புத்தகம் எழுதி, பதிப்பித்து பிறந்த நாள் பரிசாக கொடுக்கலாம்  என்று தோன்றியது. உடனே களத்தில் இறங்கினேன். சனி, ஞாயிறு மட்டுமே நேரத்தை செலவிட முடியும் என்கிற சூழல். ஆனால் அப்படி  கிடைத்த நேரத்தில், பலமணி நேரம் தொடர்ந்து எழுதினேன். 60% content ஏற்கனவே இருந்தாலும், அதையும் திருத்த, மொழி பெயர்க்க, arrange செய்ய என்று பல எழுத வேண்டியிருந்தது. 40% புதிதாய் எழுதவும் வேண்டியிருந்தது. 

என் தோழி அலமேலு சென்னையிலிருந்து proofreading -இல் மிகுந்த உதவி செய்தாள். பல முறை பகுதி பகுதியாகவும், முழுமையாகவும் draft -ஐ அனுப்பியும், அவ்வப்போதே திருத்தி அனுப்பினாள். புத்தகத்தில் எழுதப்  பல யோசனைகளையும் கொடுத்தாள். புத்தகம் பிரிண்ட் -க்கு அனுப்பும் வரை பக்க பலமாக இருந்தாள். என் மற்றொரு தோழி, குடும்ப நண்பர், சித்தா டாக்டர் நிகிலா, நான் கேட்டதும், மிகுந்த நேரமின்மை சூழ்நிலையிலும், அணிந்துரை எழுதிக் கொடுத்தார். நான் புத்தகம் எழுதுவதைப் பற்றி மிகவும் மகிழ்ந்தார். 

எழுதுவது, திருத்துவது, அட்டைப் பட வடிவமைப்பு இப்படி busy -யாக இருந்ததால், இதை முடித்து printing process -ஐ explore செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அப்படி நான் செய்திருந்தால் நேரம் இல்லாமல் போயிருக்கும். மகளின் பிறந்த நாளின் போது, புத்தகம் கையில் கிடைத்திருக்குமா என்று தெரியாது. என் அண்ணன், ஆன்மிக எழுத்தாளர் - மொழிப் பெயர்ப்பாளர் பிரசாத், அவர் வழக்கமாகப் பதிப்பிக்கும் பதிப்பகத்தை அறிமுகம் செய்ததால், உடனே வேலை நடந்தது.     

Self publishing என்று கூட சொல்ல முடியாது. Self printing என்றுதான் சொல்ல வேண்டும். முன்பக்க, பின்பக்க அட்டைகளை நானே Canva -வில் design செய்தேன். பின்பக்க அட்டையில் என் புகைப்படம் (எழுத்தாளர் -ன்னா சும்மாவா!), புத்தகத்தைப் பற்றிய சிறு synopsis, அணிந்துரை, எனது நன்றி என்று ஒரு proper எழுத்தாளரின் புத்தகத்தைப் போல பதிப்பித்தேன். விற்பனைக்காக அல்ல. ஜஸ்ட் ஒரு ஆத்ம திருப்திக்காக எழுதியது இது. மொத்தமாகவே 20 புத்தகங்கள்தான் பதிப்பித்தேன்.

"தவப்புதல்வி" என்ற தலைப்பு, என் கணவரின் பரிந்துரை. எனது விருப்பத்தில் இருந்த மற்ற புத்தக தலைப்புகள் - மனம் நிறை மகள், சுதாவின் சுந்தரி, மகளோசை, மகளதிகாரம். நண்பர்கள் - உறவினர்களுக்கு இந்த தலைப்புகளை poll வைத்து அவர்களின் விருப்பதைக் கேட்டு, முடிவு செய்தேன்.

உறவினர்கள், சில நண்பர்கள் என்று எங்கள் கூட இருந்தவர்கள்தான் இந்த புத்தகத்தை relate செய்து கொள்ள முடியும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் பிறகு புரிந்தது எல்லா அம்மாவும் இந்த புத்தகத்தோடு relate செய்து கொள்ள முடியும். யார் படித்தாலும், அவர் தங்கள் குழந்தையின் மழலை நினைவுகளை மறுபடி நினைவு படுத்திக் கொள்ள முடியும். ஏனென்றால் எல்லா குழந்தைகளும்,  தாய்மை உணர்வும் ஒன்றுதான்.  

புத்தகம் படித்து, எனக்கு ஃபோனில் அதைப் பற்றி சிலாகித்து பேசிய அனைவரும் என்னை மகிழ்வித்தார்கள். சிலர் வாட்ஸாப் மெஸேஜ்' ஆக தன் கருத்தை அனுப்பியிருந்தார்கள். எல்லாமும் மிகவும் மகிழ்வாகவே இருந்தது. ஓரிரு எதிர்மறை கருத்தும் வந்திருந்ததுதான். 

புத்தகம் கைக்கு வந்த பிறகு, சில நிகழ்வுகள் எழுத மறந்தது நினைவுக்கு வந்துது. மகளும், உறவினர்களும் கூட சிலவற்றை நினைவு படுத்தினார்கள். இப்படி பல நிகழ்வுகள் விடுபட்டு விட்டது.  

எல்லோரும் என்னிடம் கேட்டது, "மகள் படித்து என்ன சொன்னாள்?" என்பதுதான். மகள் அந்தந்த content -ற்கு ஏற்ற மாதிரி ரசித்தாள், சிரித்தாள், அவளைப் பற்றி சிலவற்றை முதல்முறை தெரிந்து கொண்டதால்  ஆச்சர்யப்பட்டாள், "என்னை கிண்டல் செய்யறியா?" என்று என்மேல் விளையாட்டாக கோபித்தாள். இப்படி நவரசங்களையும் காண்பித்தாள். ஆனால் "என்னை எவ்வளவு திட்டியிருக்க... அதப்பத்தி ஒண்ணுமே எழுதலியே" என்றாள். "ம்க்கும். நீ என்னை பத்தி புத்தகம் எழுதும்போது, அதுல எழுதிக்கோ" என்றேன். வேற என்ன சொல்லி சமாளிக்கறது சொல்லுங்க?! 

Last, but not the least, என் முதல் தோழி & என் கசின் அனிதா ஒரு கவிதையாக தன் கருத்தை எழுதித் தந்தாள். ஒவ்வொரு வார்த்தையும் exaggeration தான். ஆனாலும் இது எனக்கு மிகவும் ஸ்பெஷல்.


தவப்புதல்வி! 

---------------------

தவமிருந்து நான் பெற்ற படைப்பு!

வாசித்தேன்! மெய் மறந்தேன்!!


(சுதா) உன் தாயன்பில் என் உள்ளம் கரைந்தேன்!

தமிழின் இனிமை! தாய் பாசத்தின் பெருமை!

கண்டேன்! வியந்தேன்!!


கருவாகி உருவாகி உயிராகி 

வளர்ந்த உறவு!


உன் கனவுகள் உயிர் பெற்ற கதை!

உன் உணர்வுகள் உருப் பெற்ற நிலை!


நீ தாயுணர்வின் சிற்பி!

தமிழ்த் தாயின் தவப்புதல்வி!


எண்ணங்களை இயல்பான எழுத்துக்களாய்த் தந்த வித்தகி!

தாயன்பின் எடுத்துக் காட்டு!

அம்மா என்ற வார்த்தையின் உண்மை அர்த்தம்!


தாய்மையை அணு அணுவாய் ரசித்த ரசிகை!

தாய்மையின் மதிப்பை மற்றவர்க்கு உணர்த்திய தாரகை!        

*****

கண்மணி மானு!

----------------------------

என்னே உன் நுண்ணறிவு!

'தாயைப் போல பிள்ளை

நூலைப் போல சேலை'


வளரும் விஞ்ஞானி, மலரும் மேதாவி!

பேசும் சித்திரம், புதையலில் புதையலில் கிடைத்த ரத்தினம்!


தாய் சேய் அன்பு உரையாடல்கள்

காலத்தினால் அழியாத கல்வெட்டுகள்!


'அப்பனுக்கு பாடம் சொன்னான் சுப்பன்'

கேள்விக்கு கணைகளால் தாயை திணரச் செய்த சேய்!


அன்பு, அறிவு, அழகு 

ஒன்றாய் சேர்ந்த இறைவி நீ!


வாழ்க உங்கள் அன்பு! 

வளர்க உங்கள் உறவு!!            


- அனிதா          

December 15, 2024

July 19, 2024

வீழ்வேனென்று நினைத்தாயோ !?

தேசபக்தியும் தமிழ்ப் பற்றும் 

என் வாழ்க்கை முறையாகியிருக்க, 


உழைப்பும் விடா முயற்சியும்  

உரமாய் தினந்தோறும்  ஊக்கந்தர,

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!         


வேற்றுமையிலும் ஒற்றுமையை  

காண்பதே என் குணமாயிருக்க,


வீரமும் விவேகமும்

என் தாகம் தீர்க்கும்  

அமிர்தமாக இனிக்க,

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!   


காதலும் கனிவும் 

என்னிரு கண்ணாய் மிளிர,


பழமையும் புதுமையும்

அறிவியலும் விஞ்ஞானமும்

சரித்திரமும் சமத்துவமும்     

கடமையும் கண்ணிமையமும் 

என்னுதிரத்தில் எப்போதும் கலந்திருக்க,

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!


தடுக்கி சிலமுறை விழுந்தாலும் 

மறுபடி எழுவேன்! வெல்வேன்! வாழ்வேன்!