"அம்மா, என்னைப் பத்திரமா அழைச்சிட்டு போய்டுவியா?" என்று இரவு தூங்கப் போகும்முன் கவலை தோய்ந்த முகத்தோடு மகள் என்னிடம் கேட்டாள். அடுத்த நாள் விடிகாலை அவளும் நானும் "மட்டும்" ரயிலில் சென்னைக்குப் போகிறோம். ஏற்கனவே சில முறை, கோவிட்'டிற்கு முன் நாங்கள் இப்படிச் சென்றிருந்தாலும் (அப்போது அவள் குழந்தை), அவளுக்கு நினைவு தெரிந்து, இதுதான் முதன்முறை. அவளைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. இதுவே வேறு ஏதாவது சமயம் என்றால் "ஏண்டி என்னைப் பார்த்தா எப்பிடி தெரியுது உனக்கு? நானும் ரெண்டு டிகிரி படிச்சு கிட்டத்தட்ட 20 வருஷமா ஆபிஸ் வேலை செய்துட்டு தான் இருக்கேன். என்ன... 12 வருஷமா உனக்காகத்தான் வீட்லையே இருந்து ஆபிஸ் வேலை, வீட்டு வேலை, உனக்கு எல்லாமுமா இருந்து செய்யறேன். என்னைப் பார்த்து bla bla bla" என்று கேட்டிருப்பேன். அவளும் "போதும் மா, ஆரம்பிக்காதே" என்று கும்பிடு போட்டிருப்பா. ஆனால் இம்முறை குழந்தை நிஜமாகவே பீதியில் இருப்பதுபோல தோன்றியதால், "try பண்றேன் டி" என்று பொறுப்பாகச் சொல்லி வைத்தேன்.
அடுத்த நாள் மகள் பயந்தது போலவே நடந்தது. கர்மாவும் தன் வேலையைக் காட்டியது.
குடும்பத்தோடு எங்காவது செல்கையில், parking வசதி இல்லாத சில இடங்களில், நாங்கள் குறிப்பிட்ட இடத்தில் இறங்கிவிட, எங்கேயோ ஓரிடத்தில் car'ஐ park செய்துவிட்டு, வியர்க்க விறுவிறுக்க நடந்து வருவார் கணவர். இதனை உள்ளுக்குள் ரசித்ததுண்டு. இப்படி ரசித்ததற்குத் தான் கர்மா வேலை செய்தது என்று நினைக்கிறேன்.
ரயில் நிலையம் நெருங்க நெருங்க, traffic நிறைந்து, நாங்கள் station' ல் இறங்கும்போது சரியாக 15 நிமிடம்தான் இருந்தது. Car'ஐ நிறுத்த இடம் இல்லாததால், நாங்களே வண்டி பார்த்து ஏற வேண்டிய சூழ்நிலை. மூன்று லக்கேஜ்'களை தள்ளிக்கொண்டும், படிகளில் தூக்கிக்கொண்டும், platform எண்ணைப் பார்த்து, வண்டியை நெருங்கினால், மர்ஃபியின் விதிப் படி, எங்கள் coach கடைசியில்தான் இருந்தது. ஓடாத குறைதான். "அம்மா, முடியலைம்மா" என்ற மகளைப் பார்த்து "இந்த காலத்து குழந்தைங்க...bla bla bla"ன்னு திட்டக் கூட முடியாம, "வந்துடுச்சி வா" என்று பக்கத்துக்கு coach' ல் ஏறி, ரயிலுக்குளேயே நடந்து, எங்கள் இருக்கையில் அமர்கையில் 3 நிமிடம் இருந்தது ரயில் புறப்பட.
"டிங் டிங் டிங் யாத்ரீகண் க்ருபயா தியான் தேன்..." என்னும் குரலை சில வருடங்கள் கழித்துக் கேட்க ஆவலாக இருந்தேன். ஆனால் விறுவிறு என்று ஓடாத குறையாக வந்ததால், என் மூச்சு சத்தம் மட்டுமே எனக்கு கேட்டதுல, அந்த குரலை மிஸ் செய்துட்டேன்.
Train கிளம்பிக் கொஞ்ச நேரத்துலே குறட்டை சத்தம் சொயின்...சொயின் ன்னு கேட்க ஆரம்பித்தது. அக்கம்பக்கத்துலேர்ந்துதான் எங்கிருந்தோ வருகிறது. "என்னடா இது breakfast சாப்பிட்ட பிறகு தூங்கினா கூட பரவாயில்லயே"ன்னு எனக்குள்ள இருந்த தாய்மை கவலைப் பட்டது. கஷ்டப் பட்டு அந்த சத்தத்தைத் தவிர்க்க பார்த்தேன். ரொம்ப நேரம் கழிச்சுதான் தெரிஞ்சுது AC coach' ச்சோட sliding door சத்தம் அதுன்னு. அனாவசியமா சிலபேரைச் சந்தேகப்பட்டு, சாப்பிடாம தூங்கறாங்களேன்னு ஆதங்கப்பட்டு, emotion waste ஆனதுதான் மிச்சம்.
Train சாப்பாடு எனக்கு ஒத்து வராதுன்னு இட்லி, தயிர் சாதம்ன்னு கட்டிட்டு போயிட்டேன். என் சாப்பாடு அவளுக்கு ஒத்து வராதுன்னு, trainல வாங்கி சாப்பிட்டா மகள். Tiffin பாதி சாப்பிட்டுட்டு, ஒரு சோறு பதம்னு train lunch வேணாமுன்னுட்டா. ஆனாலும் கட்லட் & சமோசா’க்கு ஒரு benefit of doubt கொடுத்தா. ஆனா வாரிசு & துணிவு மாதிரி ரெண்டும் அவளை ஏமாத்திடுச்சி.
ரயில் சிநேகமெல்லாம் இப்போ இல்லைங்க. எல்லோரும் மொபைலும் air-pod’ டுமாக Busyயாக இருக்கிறார்கள். நல்ல வேளையாக அந்த கண்ணாடி ஜன்னல் screenஐ வெயிலுக்கு தேவையானாற்போல் மூடி/திறந்து விடும்போது, முன் சீட்டிலிருந்து ஒண்ணும் ஆட்சேபணை வரவில்லை. ஆனால் phone charge பண்ற switch'க்குதான் லைட்டா ஒரு உரிமைப் போராட்டம் எல்லோரிடத்திலும்.
“AC coach’ ங்குறதால ட்ரெயினோட தடக்-தடக் சத்தமே கேக்கல” ன்னு மக கிட்ட சொன்னா "இதுல கூடவாம்மா nostalgiaவ தேடுவ"ன்னு சலிச்சிக்கிட்டா. "இந்த காலத்து குழந்தைங்க...bla bla bla"ன்னு நான் சொல்றத கேக்காம ear phone மாட்டிகிட்டு அரிஜித் சிங் பாட்டு கேட்க ஆரம்பிச்சிட்டா.
அப்பாடா இன்னும் குறைந்தது ஒரு மணி நேரம் என்கிட்டே "சென்னை எப்ப வரும்"ன்னு கேக்கமாட்டா என்று என் மொபைலை எடுத்தேன். ஒவ்வொரு ott லையும் ஒவ்வொரு படம் டவுன்லோட் செஞ்சி வெச்சாலும், எதையுமே பார்க்க விருப்பம் இல்லாம போச்சு. சரி, தூங்கலாமுன்னு பாத்தா, இடது வலதுன்னு ரெண்டு பக்கமும், தலை சாய்ந்துக்க வசதிப்படாமல், நாமதான் நடுநிலையாச்சேன்னு திடீர்னு தோண, food tray ல சாய்ந்து கொஞ்ச நேரம் தூங்கினேன். அப்படி இப்படின்னு ஒருவழியா சென்னை போய் சேர்ந்தோம்.
சொந்த ஊருக்கே விருந்தாளி மாதிரி (ஒரு சோக வயலின் இசை மனசுல ஓடவிடுங்க) போயிட்டு வர்றதெல்லாம் கடினமான அனுபவம்தான். இருந்தாலும் அம்மா வீடு, உறவினர்கள், நண்பர்கள் என்று சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்க ஊரு, எங்க ஏரியா, பீச், கோயில், நான் படித்த பள்ளி, ஜன நெரிசலான கடை வீதிகள், தி நகர் platform கடைகள் என்று மகளுக்கு காட்டியதில் மகிழ்ச்சி. இருந்தாலும் திருவல்லிக்கேணியில் நாள் முழுக்க கழிக்கும் ஆசை இந்த முறையும் நிறைவேறவில்லை. சென்னை புத்தகக் கண்காட்சி நான் அங்கு இருந்த போது இருந்திருக்கலாமேன்னு தோன்றியது. ஆக மொத்தம் ஒரு வார சென்னைப் பயணம் ஓடியே போச்சு.
திரும்பி கோவை வந்தவுடன் "உன்னை பத்திரமா கூட்டி வந்து சேர்த்துட்டேனா" என்றேன் மகளிடம். RRR ஆஸ்கார் விருது அவளுக்கே கெடச்ச மாதிரி சந்தோஷபட்டா. எங்க ஊரிலிருந்து அவ ஊருக்கு வந்துட்டாளாமாம்.