November 20, 2021

I am a harmless fake id on social medias



சமூக வலைதளங்களில் Fake id அல்லது முகம் / அடையாளம் மறைக்கும் மக்கள் சிலபேருக்கு திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல சம்பவம் சிலசமயம் நடந்து விடுகிறது. அப்படி எனக்கு நடந்த சம்பவங்கள் இவை.


சம்பவம் 1, 1a, 1b etc:

பல தமிழ் எழுத்தாளர்களை FBல் பின் தொடர் கிறேன். அவர்கள் சில சமயம் சுவாரஸ்ய போட்டிகள் வைக்கிறார்கள். அல்லது அவர்களின் நூல்களின் வாசித்தால், விமர்சனம் எழுதி அவர்களுக்கு அனுப்பத் தோணும். நான் அடையாளம் மறைத்தே இருந்தாலும் சமூகத் தளங்களில் அவர்களை அணுக ஒரு தயக்கம் இருக்கும். மிகச் சிலமுறை ஓரிரு எழுத்தாளர்களுக்கு ஈமெயிலில் புத்தக விமர்சனம், போட்டிகளில் பங்கேற்பு என அனுப்பியுள்ளேன். அவர்களும் ஓரிரு முறை, என் ஈமெயில் ஐடியை மறைத்து, அவர்களின் FB பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். அதையும் மூச்சு காட்டாமல் ஒளிந்தே பார்ப்பேன். "மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன"ன்னு அந்த FB post என்னைப் பார்த்து கேக்குறா மாதிரியே இருக்கும்.


சம்பவம் 2:

சென்ற வருடம் எனது கிட்டத்தட்ட 10 கதை / கட்டுரைகள் விகடன் தளத்தில் வந்த போதும், விகடன் அவற்றை தன் FB பக்கத்தில் ஒவ்வொரு முறையும் வெளியிட்டிருந்த போதும், நான் அதை ஒரு முறை கூட என் FBல் ஷேர் செய்யவில்லை. FBல் எல்லா பக்க உறவினர்களும், நண்பர்களும் என் நட்பில் உள்ளார்களே என்ற தயக்கம்தான் காரணம். "மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்தது இல்லை, நானாக எழுதியது தான்" என்றாலுமே ஒரு தயக்கம்.


சம்பவம் 3:

சென்ற வருடம் எழுத்து பயிற்சி கூகிள் மீட் ஒன்றை எழுத்தாளர் பா ராகவன் அவர்கள் நடத்தினார்கள். இப்போது நடப்பது தொடர் வகுப்புகள் என்று நினைக்கிறேன். ஆனால் அப்போது ஒரே ஒரு செஷன் நடந்தது அவ்வளவுதான். அதுதான் நான் பங்கேற்ற முதல் மற்றும் கடைசி சமூக சந்திப்பு. அதிலும் வீடியோவை அணைத்து, பெயரை மாற்றிக் கலந்து கொண்டேன்.    

கொஞ்சம் interactiveவாகத்தான் வகுப்பு சென்றது. No surprise, I was a silent spectator. பாரா அவர்கள் "யார் எழுத விருப்பப் படுவார்கள் அல்லது யார் எழுதுவார்கள்" என்ற பொருள் வரும்படி ஒரு கேள்வியைக் கேட்டார். பங்கு கொண்ட சில பேர் அவர்களுக்கு தோணியதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். எப்பவும்போல எனக்குத் தயக்கம். ஓரிரு வினாடிகள் யாரும் பேசாமல் அமைதியானபோது நான் அன்மியூட் செய்துகொண்டு "Introverts எழுதுவதை prefer செய்வார்கள்" என்று "எனக்கு" செட் ஆகிறதைச் சொன்னேன்.         

சட்டென்று பாரா அவர்கள் "ஆங், இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தேன். யாரு சொன்னது?" என்றதும், "ஜனனி" என்று நான் “கொடுத்த” பெயரைச் சொன்னேன். "நான் எதிர்பார்த்த பதில் இதுதான். யாரு சொன்னதுன்னு கொஞ்சம் வீடியோ ஆன் செஞ்சி பேசுறிங்களா ம்மா, உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னா" என்று வினவியதும், ஐயையோ, என்னடா செய்யறதுன்னு கொஞ்சம் தயக்கப் பட்டு சில வினாடிகளுக்கு வீடியோ ஆன் செய்து, பாரா அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, அவர் வகுப்பை மேற்கொண்டு தொடர்ந்த போது, வீடியோவை நிறுத்திக் கொண்டேன்.

பள்ளி தினங்களில் ஆசிரியர்கள் கேட்ட கேள்விக்குச் சரியான பதில் அளித்து, அவர்களிடம் பாராட்டு வாங்கிய தருணங்கள்தான் நினைவு வந்தது. சிறிய அங்கீகாரம் கிடைத்தாலும், ஃபேக் ஐடியா வாங்கிக்கறோமேன்னு தோணும். இந்த முறை, முகத்தைத் தெரியப் படுத்தினாலும், பேரை மாற்றிக் கொடுத்திருந்தேன். அப்பவும் ஃபேக் ஐடி ஃபீலிங்தான்.

நாம என்ன வீடியோவையா ஆன் செய்யப் போறோம்னு nightyல தான் அந்த கிளாஸ் attend செய்தேன். எதிர்பாராம வீடியோ ஆன் செய்ய வேண்டியதா ஆயிட்டதால, முகத்தை மட்டும் காட்டுமளவுக்கு கேமரா அருகில் சென்று எல்லோரையும் பயமுறுத்தியது தனி விஷயம்.    

இந்த முகத்தை / அடையாளத்தை காட்டும் தயக்கம் இப்போ இல்லேங்க, தலைவர் ஸ்டைலில் சொல்லனும்னா, "அது கூடவே பொறந்தது, போகவே போகாது". (சரி சரி சலிச்சுக்காதிங்க. மேலே படிங்க.) அவ்வளவு பழசு அந்த தயக்கப் பழக்கம்.


சம்பவம் 4:

சுமார் பதினைந்து வருடத்திற்கு முன்பு நடந்தவை இவை. Ear phone மாட்டிக் கொண்டு, பஸ்ஸில் ஆபிஸ்க்கு போக வர FM கேட்டுக் கொண்டே கழிந்த பசுமையான வருடங்கள் அவை. FMல் பல போட்டிகளுக்கு SMSல் பங்கேற்றால் போதுமானது. பலமுறை அப்படி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அனுப்பியுள்ளேன். அந்த நிகழ்ச்சி முடியும்போதே வெற்றியாளர்களை அறிவித்து விடுவார்கள். "அண்ணாமலை படத்தில் ரஜினியின் பெயர் என்ன?" என்பது போல கடினமான கேள்விகள் அவை. அப்படி ஒரு கடினமான போட்டியில் நான் ஒரே ஒரு முறை (இரண்டு சினிமா டிக்கெட்) வெற்றி பெற்றேன். நிகழ்ச்சியில் என் பெயரை அறிவித்து, நிகழ்ச்சி முடிந்ததும், அந்த RJவே ஃபோன் செய்தார். இப்படி ஒரு callஐ எதிர்பார்த்திராத நான் ஐயையோ என்னடா இதுன்னு பேசி வைத்தேன். அந்த சினிமா டிக்கெட் என் கைக்குக் கிடைக்கவில்லை என்பது தனி விஷயம்.


சம்பவம் 4a:

இன்னொரு முறை, சூரியன் FMல் (என்று நினைவு) நடிகர் நாகேஷ் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. நான் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்த நான் சும்மா இல்லாமல், "எனது அப்பாவும், நாகேஷும் நண்பர்கள்" என்று SMS அனுப்பினேன்.

உடனே என்னை ஃபோனில் அழைத்து விட்டார்கள் அந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த ரெண்டு RJக்களும். "இப்போ பிரேக் முடிஞ்சி நிகழ்ச்சி தொடங்கும்போது, உங்க அப்பாவிற்கும், நாகேஷ் சாருக்கும் நடந்த ஏதாவது ஒரு நிகழ்வு பற்றிச் சொல்ல முடியுமா" னு கேட்டார்கள். ஐயையோ என்னடா செய்யறதுன்னு யோசிச்சு, சரி சொல்லுவோம்னு கீழேயுள்ள நிகழ்வைச் சொன்னேன்.

“நடிகர்கள் நாகேஷ், ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தரராஜன் இவர்களுடன் எனது அப்பாவும் திருவல்லிக்கேணியில் ஒரே மேன்க்ஷனில் தங்கியிருந்தார்களாம். இவர்கள் எல்லோருக்குமே, அவர்களது careerரின் ஆரம்ப நாட்கள் அவை. என் அப்பாவிற்கு சினிமா career இல்லை என்றாலும் இவர்களுக்குள் ஓரளவு நட்பு இருந்திருக்கும் போல. அதனால்தான், பல வருடங்கள் கழித்து திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் இருக்கும் அம்மன் கோயில் அருகில், நடந்து போய்க்கொண்டிருந்திருக்கும் எனது அப்பாவை பார்த்த நாகேஷ் அவர்கள், வண்டியிலிருந்து இறங்கி, ஓரிரு வார்த்தைகள் பேசியுள்ளார். அதற்குள் அங்கு ஒரு சிறு கூட்டம் கூடவே, என் தந்தை சங்கோஜப்பட்டு நழுவி வந்து விட்டிருக்கிறார்.”

இது முகமறியா அடையாளம்ங்குறதால எப்படியோ சொல்லி முடிச்சிட்டேன்.

அவ்ளோதான்!

இப்படி என்னை அடையாளம் காட்டும் எதனிடமிருந்தும் ஒரு தயக்கம். இப்படியே இருந்தா நாளப்பின்ன எனக்கு ஒரு அவார்ட் கொடுத்தாங்கன்னா, அதை எப்படிப் போய் மேடை ஏறி தயக்கமில்லாம வாங்குறதுங்குறதுதான் என்னோட கவலை எல்லாம். என்ன செய்யறது சொல்லுங்க பிரண்ட்ஸ்?!

Update after a couple of days of posting this by tagging PaRa sir. He has posted this on his FB and as usual, I was checking it with anonymous mask.