October 31, 2013

நானும், உடற்பயிற்சியும்


என் பொண்ணு என்னையப் பார்த்து 'எனக்கு ஒரு தொப்பைதான் இருக்கு, உனக்கு மட்டும் ஏம்மா ரெண்டு தொப்பை இருக்கு'ன்னு கேட்டப்போக் கூட நான் சீரியசா எடுத்துக்கல. கணவர் கிண்டலடிக்கும்போதும் லைட்டாதான் எடுத்துக்கிட்டேன். (என் பெருந்தன்மைய இதிலிருந்து நீங்க தெரிஞ்சிக்கலாம்). 

ஆனா ஒருநாள், என் டயரில குறிச்சிக்க வேண்டிய அந்த நாள் வந்தது. பொண்ணோட விளையாட மொட்டை மாடி போனப்போ, அடுத்த தெரு வயதான பெண்மணி (அடிக்கடி மொட்டை மாடியில் பார்த்து சிநேகம்), 'எவ்ளோ மாசம்மா ஆகுது'ன்னு கேட்ட நொடி முடிவு செஞ்சேன், இனிமே உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் செஞ்சியே ஆகணும்னு.

நான் உடற்பயிற்சி செஞ்சேனா, இல்லையாங்கிறத விட நான் குண்டாரத்துக்கு காரணம் யாருன்னு நீங்க தெரிஞ்சிக்கணும். நான் கொஞ்சம் குண்டா இருக்குறதுக்கு நான் காரணமே இல்லைங்க. என்னை சுத்தி இருக்குறவங்கதான். எப்படின்னு தெரிஞ்சிக்க மேல (கீழே?) படிங்க.

நான், கணவர் மற்றும் ஒரு மகள் அடங்கிய கூட்டுக் குடும்பம் எங்களுது. அதனால வீட்டு வேலைக்கே நேரம் சரியா இருக்கும். என் கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்ட கணவர், மதிய சாப்பாட்டை வெளியேவே பார்த்துப்பார். (இதுக்கும், என் சமையலின் கைவண்ணத்துக்கும் ஒண்ணும் சம்பந்தம் இல்லங்க).

வேலை ஜாஸ்திங்கறதால, வீட்டு வேலையில் உதவ ஒரு maid இருக்காங்க. அவங்க என்னை ஒரு வேலைகூட செய்ய விடமாட்டாங்க. துடைக்கறது, துவைக்கறது, கழுவறதுன்னு எல்லாத்தையும் செஞ்சிடுவாங்க. ரெண்டு, மூணு குழந்தைய கூட ஈசியா வளத்துடலாம், ஆனா ஒரு குழந்தைய வளர்க்கறது ரொம்ப கஷ்டம். அதனால மேலே சொன்ன maidடே, சாயங்காலம் ரெண்டு மணி நேரம் மகளைப் பார்த்துக்க வந்துடுவாங்க. 

நான் இப்படி நாள் முழுக்க கஷ்டப் படுறேனேன்னு, என் மக, அவ பங்குக்கு, அவளுக்காக செஞ்ச, high-fatty-foodsஐ, அவ சாப்பிடாம, எனக்காக விட்டுக் கொடுத்திடுவா. 

இப்படி எல்லாரும் எனக்காக பரிவா இருக்கும்போது, அந்த சந்தோஷத்துலதான் எனக்கு வெயிட் போடுதுன்னு உங்களுக்கே இப்ப புரிஞ்சிருக்கும். 

அப்படியும் சில நேரம் வாக்கிங் போகலாம்னு முடிவெடுப்பேன். அப்போல்லாம் தினமும் ரெண்டு மணி நேரம் பவர் கட்டாகும். அந்த நேரத்தை வீணடிக்காம, வீட்டுக்குள்ளேயோ/மொட்டை மாடியிலோ வாக்கிங் செய்வேன். ஆனா என் மகளும் என்கூடவே வேகமா நடப்பா. அவளே எலும்பும் தோலுமா இருப்பா, இன்னும் நடந்து, அதனால இன்னும் ஒல்லி ஆயிட்டாள்னா? (எப்படில்லாம் யோசிக்கறேன் பாருங்க!) ஐயோடா! வேணவே வேணாம்னு நான் நடக்கறதையே நிறுத்திட்டேன்.

எனக்கு பேசிக்கா நேரத்தை வீணடிக்கப் பிடிக்காது. எதுக்கு உடற்பயிற்சிக்குன்னு நேரத்தை செலவு செய்யணும், அதுவும் வீட்டு வேலையே எக்ஸ்சர்சைஸ்ஸா இருக்கும்போது?
  • காலையில எழுந்துக்கும்போதே, அலாரத்தை (தலகாணிக்கு கொஞ்சம் மேலேயே வெச்சாலும், எப்படியோ அது தானா நகர்ந்து தூரப் போய்டுது.), படுத்தபடியே கையால் துழாவி, தேடி கண்டுப் பிடித்து நிறுத்துறேன். - இது தோள்களுக்கு பயிற்சி.
  • அப்பா, பொண்ணு ரெண்டு பெரும் குனிய மாட்டாங்க. எதையாவது கீழே போட்டு எடுத்து கொடுக்கச் சொல்லுவாங்க. - இது இடுப்புக்கு பயிற்சி.
  • பொண்ணு பின்னாடியே pediasure எடுத்துட்டு ஓடணும். - இது காலுக்கு பயிற்சி 
  • மகளை கீழே உட்கார்ந்து சாப்பிட வைக்க, வீட்டுப் பாடம் செய்ய வைக்கணும் - இது முதுகெலும்புக்கு பயிற்சி.

இப்படி வீட்டு வேலையே(?!) எக்ஸ்சர்சைஸ்தானே, தனியா என்னத்துக்கு செய்யணும் முடிவெடுத்துட்டேன்.

என்ன, என்னோட முடிவு சரிதானே?

தீபாவளி என்றாலே...



நடுத்தர வயதடைந்து விட்டதால், என்ன நாள் / பண்டிகை என்றாலுமே, பல நினைவுகளை அது கிளருகிறது. அப்படி எனக்கு இந்த தீபாவளி பல பழைய நினைவுகளை ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறது.

என்னுடைய பால்யம்(மும்) ஏழ்மையிலேயே கழிந்திருக்கிறது. எனக்கு இரண்டும் அண்ணா என்பதால், நான்தான் வீட்டில் செல்லம் என்பது சொல்லத் தேவையில்லை. என் அப்பாவும், பெரும்பான்மையான (மகளைப் பெற்ற) அப்பாவைப்போல் தங்கமீன் அப்பாதான்.

என் அண்ணனுடன், என் மாமாவின் நண்பரின் பட்டாசு கடைக்கு, தீபாவளியின் முன் தினம் இரவு போய், ஓசி பட்டாசு வாங்கி வருவது - தொலைகாட்சி மோகம் இல்லாத அக்காலங்களில், எங்களின் பெரிய கசின் கூட்டத்தோடு ராகவேந்திர மடத்திற்கு சென்று, தீபாவளி அன்று அங்கு தரும் எண்ணையை தலையில் தேய்த்து கொள்வது - அண்ணன்கள் விடும் பட்டாசை பார்ப்பது (எனக்கு பயம் இப்போதும்) - அம்மாவோடு தீபாவளி அன்று மதியம் என் மாமா வீட்டிற்கு சென்று, பாட்டியை நமஸ்கரித்து விட்டு, மாமா மகள்களுடன் விளையாடுவது - இன்னும் சில நினைவுகள் இருந்தாலும் என்றுமே மறவாத தீபாவளியாக ஒன்றை அமைத்துவிட்டது விதி.

எவ்வருடமுமே இல்லாத திருவருடமாக, தீபாவளிக்கு எனக்கு பாவாடை சட்டை, அதுவும்  ரெண்டு மாதத்திற்கு முன்னமேயே வாங்க அப்பா-அம்மாவுடன் கடைக்கு சென்றாகிவிட்டது. பட்டு இல்லை என்றாலும், பார்டர் போட்ட, ஜரிகை வைத்த பளப்பள பாவடைகளில் நான் அடம் பிடித்து வாங்கியது 'கருப்பு நிறத்தில் அரக்கு கலர் பார்டர்' போட்ட பாவாடைத்துணி. அம்மாவிற்கு பண்டிகைன்னு வாங்குவது கருப்பாக இருப்பதில் விருப்பமில்லை. ஆனால் அப்பாதான் 'தங்கமீன்' வகை ஆயிற்றே! அதையே வாங்கிக் கொடுத்து விட்டார்.

அந்த வருடம்தான் சிறிது பணம் புழங்கியது போலும் அப்பா கைகளில், பட்டாசு கூட 'வாங்கி'க் கொடுப்பதாய் கூறி இருந்தார். ஆனால் தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்போது, ஒரு ஹார்ட் அட்டாக்கினால், இறந்தே விட்டார். :'(

வளர்ந்து, பல மூட நம்பிக்கைகளை, நான் தூக்கி எறிந்த போதும், பண்டிகைன்னா கருப்பு வாங்கக் கூடாதுங்கிறது மட்டும் இன்றும் கடைப் கடைபிடிக்கிறேன்.