October 20, 2012

எங்கள் வீட்டு கொலு Vs எங்கள் செல்ல வாலு




கடந்த இரண்டு வருடங்களாக டைனிங் டேபுள் மேல் மூன்று படியிட்டு, எங்கள் வீட்டு வால்'லிடமிருந்து காப்பாற்றப்பட்ட கொலு பொம்மைகளை, இந்த வருடம் 'நம்ம மானு பெரியவளாயிட்டா (மூன்று வயது!!), சொன்னா கேட்டுக்குவா. கீழ் நோக்கியே படி வை' ன்னு என்னவர் சொன்னதற்காக அப்படியே  வைக்கப்பட்டது. என்ன இருந்தாலும் காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சுதானே. :) 

ஒவ்வொரு கொலுவுக்கும் தவறாமல் எட்டிப்பார்ப்பது என் கணவரின்  கடுகடுப்பு,  ஸ்டீல் பலகைகளை முடுக்கி படிக்கெட்டுகளை அவர்தானே அமைக்க வேண்டும் :-D எப்பவும்போல இந்த முறையும் அவரது எரிச்சலை கண்டுக்காமல், சில பல ஜோக்ஸ் சொல்லி (சரி சரி ஜோக் சொல்ல முயற்சி செய்து) கூல் செய்து பொம்மைகளை பரணிலிருந்து இறக்கி, படிக்கெட்டுகள் செட் செய்து வைத்தாயிற்று. "நம்ம வீட்லதான் show case இருக்கே, permanentஆ கொலு பொம்மைகளை இங்கயே வெச்சிடலாமே" என்ற சமயோசித அட்வைஸ்(?!) க்கும் மையமாக சிரித்து வைத்து, பொம்மைகளை துடைக்கும் வேலையில் உட்கார்ந்து  விட்டேன். நான் தான் அடுக்குவேன் என்று அடம்பிடித்து, உதவியில் இறங்கிவிட்டாள் மகள்.

அந்த காலம் போலல்லாமல், சென்னையில் இப்போதுள்ள வழக்கம், ஒன்பது நாளில் ஒருநாள்தான் கொலுவுக்கு அழைப்பார்கள்/வருவார்கள். அதனால் தினமும் சுண்டல் வீணாவதன் கவலை இல்லை. நேற்று அனைவரையும் (20 வீடு) அழைத்தாயிற்று. நேற்று மதியம் முதலே அடை மழை. நானோ அரைகிலோ பட்டாணி காலையில் ஊறப்போட்டு சாயிங்காலம் சுண்டலும் செய்துவிட்டேன். மழை ஒருவழியாக நின்று, ஒருவழியா  எல்லாரும் வந்து, சுண்டலும் காலியாகிவிட்டது. :)

பெரியவர்களுக்கு பிளாஸ்டிக் டப்பா & ஜாக்கெட் பிட், சிறுவர்களுக்கு பென் & ஸ்கெட்ச் கொடுத்தாகிவிட்டது. மற்றபடி சம்பிரதாயமான பெரியவர்களை - பாடச்சொல்வது, சிறுமிகளை - சினிமா பாட்டானாலும் பாடுன்னு சொல்வது, வாண்டுகளை - ஸ்லோகம் சொல்லச்சொல்வது போன்றவை நடந்தது. வீட்டுக்கு வந்தவங்களுக்கு தண்டனை போல (சுண்டலை சொல்லலீங்க, அது தனி!), என் கணவர், மகளின் புகழை பாடத் தொடங்கி விடுவார். 

இனி என் மூன்று வயது மகளின் விஷமங்கள்:

  • பெட்டியிலிருந்து எடுத்த முதல் பொம்மையே பேப்பர் மோல்ட் செய்யப்பட்ட, வாங்கி நான்கைந்து ஆண்டுகள் ஆனாலும், பளபளப்பு குறையாத கஜ லக்ஷ்மி. அவ்வளவு அழகு அந்த பொம்மை. மானு அடம்பிடித்து என்கையிலிருந்து வாங்கி விளையாட ஆரம்பித்துவிட்டாள். போகிறதென்று மற்ற பொம்மைகளை தூசி தட்டி வைக்கும்போது, 'அம்மா, என்னை பாத்து சிரி' என்று அசடு வழிந்தாள் மகள். அவள் அப்படி சொன்னாலே ஏதோ விஷமம் செய்திருக்கிறாள் என்று புரிந்துகொள்ள வேண்டும். என்னவென்று பார்த்தால், அந்த பொம்மையின் தலை வெட்டப்பட்டுள்ளது. :-(

  • அவளது பள்ளியில் நவராத்திரி கொண்டாடுவதால், ஒரு ரங்கநாதர் பொம்மை வாங்கி, 'இது உங்க ஸ்கூல் கொலுவுக்கு' என்று சொல்லி அவளிடம் கொடுத்தனுப்பினோம் சென்ற வாரம். எங்கள் வீட்டில் எல்லா பொம்மையும் வைத்த பிறகு, 'மானு, எப்படி இருக்கு நம்ம வீட்டு கொலு' என்றால் அவள் சர்வசாதாரணமாக 'பெருமாள், அனுமார் எல்லாம் வெச்சிட்டே. ரங்கநாதர் பொம்மையே இல்லை. இத போய் கொலுங்ரே?, போம்மா நீ' என்கிறாள். 

  • பொம்மையை தொடக்கூடாதுன்னு அவ்வப்போது சொல்லி சொல்லி வைப்பேன் அவளிடம். நேற்று விளக்கேற்றும்போது கவனித்தேன், தசாவதாரத்தில் கல்கி திரும்பி நின்றுக்கொண்டிருந்தார். 'ஏன் மானு இப்படி பண்ணினே?' என்றால், அவள் கூலாக 'அம்மா, அந்த சாமி சாய்பாபவ பாக்கணும்னு சொல்லிச்சு, அதான் திருப்பி வெச்சேன்.' என்கிறாள்.

  • எங்கள் வீட்டில் வேலை செய்பவர், மானுவின் முதல் தோழி. அவங்களுக்கு ஒருநாள் சுண்டல் கொடுத்து, அவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இவளுக்கு சுண்டல் பிடிக்காது (வேறென்ன பிடிக்கும்னு கேக்காதீங்க. அவளுக்கு எதுமே பிடிக்காது). அதனால் அவர் சாப்பிடுவது பார்க்க பிடிக்காமல் 'ஆன்ட்டி, சுண்டல் எல்லாம் சாப்பிடக் கூடாது, பல்லுல பூச்சி வந்துடும்' என்கிறாள்.  

இதுதான் என்வீட்டு கொலுவின், எங்கள் செல்ல வாலுவின் கதை. 

நீங்க எப்போ வரீங்க எங்க வீட்டு கொலுக்கு?